முகமது இர்பான் சஸ்பெண்ட்
பிஎஸ்எல் டி20 தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ் தான் வேகப் பந்து வீச்சாளர் முகமது இர்பான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித் துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட பிஎஸ்எல் டி20 தொடரில் முகமது இர்பான், இஸ்லாமாபாத் அணிக்காக விளையாடினார். அப்போது அவர் சூதாட்ட தரகருடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது.
ஏற்கெனவே சூதாட்ட விவகாரம் தொடர்பாக இதே அணியை சேர்ந்த ஷர்ஜீல்கான், காலித் லத்தீப் ஆகியோரையும் பாகிஸ்தான் வாரியம் சஸ்பெண்ட் செய்திருந்தது. மேலும் கடந்த மாதம் லண்டனில் பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு வீரர் நசீர் ஜாம்ஷெட் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்.
சூதாட்ட விவகாரம் தொடர் பாக, 34 வயதான முகமது இர்பான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு குழு முன்பு கடந்த இரு தினங் களுக்கு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சூதாட்டதரகர் ஒருவர் தன்னை அணுகியதை அவர் ஒப்புக் கொண்டார்.
‘‘கடந்த செப்டம்பர் மாதம் எனது தந்தை காலமானார். இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் எனது தாயாரும் மரணடைந்தார். இதனால் சூதாட்ட தரகர் தொடர்பாக பாகிஸ்தான் வாரியத் திடம் உடனடியாக தகவல் தெரிவிக்க முடியவில்லை’’ என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இர்பானை அனைத்து வகையிலான கிரிக் கெட் போட்டியிருந்தும் சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தர விட்டுள்ளது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை உடடினயாக அமல் படுத்தப்படுவதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
சுமார் 7 அடி உயரம் கொண்ட முகமது இர்பான் கடந்த 2010-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 4 டெஸ்ட், 60 ஒருநாள் போட்டி, இருபது டி20 ஆட்டங்களில் அவர் விளையாடி உள்ளார்.