Breaking News
கிடப்பில் போன ஜெ., அறிவிப்பு: தமிழக போலீசார் புலம்பல்

அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், போலீஸ் மானிய கோரிக்கையின் போது, ஜெயலலிதா அறிவித்த அறிவிப்புகள், இன்னும் அமலுக்கு வராமல் உள்ளன என, போலீசார் புலம்பி வருகின்றனர்.

கடந்த, 2016 ஆக., 22ல், சட்டசபையில், போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பதிலளித்த, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, துறை சார்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.

காவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு, அவர்களின் பதவி மற்றும் பணிப்பிரிவு அடிப்படையில், மாதம், 200 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாய் வரை இடர்படி வழங்கப்படுகிறது. இது, இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.

காவல் பணியாளர்களுக்கு, அவர்களின் பதவிக்கேற்ப, சீருடை மற்றும் உபகரண பராமரிப்புப்படி, மாதம், 100 ரூபாயில் இருந்து, 450 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இது, மாதம் ஒன்றுக்கு, 100 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என, ஜெ., அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும், போலீசாருக்கு சீருடை மற்றும் உபகரண பராமரிப்புப் படி, 100 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது.

ஆனால், இடர்படி இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு, இன்னும் அமலுக்கு வரவில்லை. அதற்கான அரசாணையே இன்னமும் வெளியாகவில்லை என, அதிகாரிகள் கூறுகின்றனர். ஜெ., அறிவிப்புக்கே இந்த நிலை என்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.