Breaking News
இளையராஜா தரப்பு நோட்டீஸ்: இனிமேல் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என எஸ்.பி.பி அறிவிப்பு

இளையராஜா தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், இனிமேல் அவருடைய பாடல்களைப் பாடப்போவதில்லை என எஸ்.பி.பி அறிவிப்பு

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தமிழ் திரையுலகுக்கு பல்வேறு வரவேற்பைப் பெற்ற பாடல்களைக் கொடுத்த கூட்டணியாகும். தற்போது இக்கூட்டணி பிரிந்துள்ளது உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் எஸ்.பி.பி திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அமெரிக்காவில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்கள்.

இச்சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.

இந்த சர்ச்சைக் குறித்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “அமெரிக்காவிலிருந்து அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். சியாட்டெல், லாஸ் ஏஞ்சலஸ் மாகாணங்களில் கடந்த வாரம் மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். தாங்கள் காட்டிய அன்புக்கு நன்றி.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக இளையராஜாவின் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு சட்ட நோட்டீஸ்களை அனுப்பியிருந்தார். என்னுடன் பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கச்சேரி நடைபெறும் இடங்களின் நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தன.

அதில், இளையராஜாவிடம் முன்னனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தால், மேடைகளில் பாடினால் அது காப்புரிமை மீறலாகும். அவ்வாறான உரிமை மீறலுக்கு பெருந்தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ்பிபி 50 என்ற இந்த நிகழ்ச்சி எனது மகனால் தயாரிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் டொரண்டோவில் இந்நிகழ்ச்சியை துவக்கினோம். பின்னர் ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபய் ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போதெல்லாம் இளையராஜாவிடமிருந்து எனக்கு எவ்வித எதிர்ப்பும் வரவில்லை. ஆனால், இப்போது அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதும் மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்பது எனக்குப் புரியவில்லை.

ஏற்கெனவெ கூறியதுபோல், எனக்கு இச்சட்டம் குறித்து தெரியாது. இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டியது எனது கடமை. இனி மேடைகளில் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை.

அதே வேளையில், ஏற்கெனவே ஒப்புக் கொண்டதுபோல் நிகழ்ச்சியையும் நடத்தியாக வேண்டும். இறைவன் அருளால் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் நான் அதிகளவில் பாடியிருக்கிறேன். நீங்கள் அனைவரும் எனது நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் பேரன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இத்தருணத்தில், எனது வேண்டுகோள் எல்லாம் இப்பிரச்சினை தொடர்பாக எவ்வித கடுமையான வாதங்களையும் கருத்துகளையும் முன்வைக்க வேண்டாம் என்பது மட்டுமே. இது கடவுளின் கட்டளை என்றால் அதை நான் பணிவுடன் கடைபிடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

பல்வேறு வெற்றி பாடல்களைக் கொடுத்த கூட்டணி, தற்போது பிரிந்துள்ளதால் இசை ரசிகர்கள் பலரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.