வறண்டு வரும் சென்னை புறநகர் ஏரிகள்
கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்து வருவதால் தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்படுவது இன்னும் ஒரு வாரத்தில் நிறுத்தப்படுவதற்கான அபாயம் உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் 2 மாதங்களுக்குத் தேவையான தண்ணீர் மட்டுமே இருப்பதாக தகவல்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து திறக்க வேண்டிய கிருஷ்ணா நீரை, கடந்த அக்டோபர் 10-ம் தேதி ஆந்திர அரசு திறந்துவிட்டது. கிருஷ்ணா கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரை, ஆந்திர விவசாயிகள் சட்ட விரோதமாக எடுத்ததால் நீர் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. பிறகு வார்தா புயலால் கடந்த டிச.11-ல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பிறகு, அந்த மாநில முதல்வருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து கடந்த ஜன.9-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஜன.12-ம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, அப்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து கூடுதலாக கிருஷ்ணா நீர் வழங்கக் கோரினார். இதையடுத்து, கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு விநாடிக்கு ஆயிரத்து 700 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறையத் தொடங்கியதால், சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு கிருஷ்ணா நீர் பெறப்பட்டது. சோமசீலா அணையிலும் நாளுக்கு நாள் நீர் இருப்பு குறைந்து வந்ததால் கடந்த வாரத்துக்கு முன்பு, கண்டலேறு அணைக்கு நீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதனால், கண்டலேறு அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. தமிழகத்துக்கு அளிக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த 3-ம் தேதி விநாடிக்கு 725 கனஅடி அளவில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 300 கனஅடியாக இருந்தது. அந்த நீர், நேற்று காலை நிலவரப்படி, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜீரோ பாயிண்டுக்கு விநாடிக்கு 11.29 கனஅடி அளவில் வந்து கொண்டிருந்தது.
எனவே, 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு நேற்று காலை நிலவரப்படி 441 மில்லியன் கனஅடியாக இருந்தது. கண்டலேறு அணையில் நாளுக்கு நாள் நீர் இருப்பு குறைந்து வருவதால், இன்னும் ஒரு வாரத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளில் உள்ள தற்போதைய நீர் இருப்பு, 2 மாதங்களுக்குத்தான் சென்னையின் குடிநீர் தேவையை தீர்க்க உதவும் என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
நேற்றைய நிலவரப்படி, சென்னைக்கு குடிநீர் தரும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளின் மொத்த நீர் இருப்பு ஆயிரத்து 506 மில்லியன் கனஅடி என்ற அளவிலேயே இருந்தது. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 057 மில்லியன் கனஅடி என்பது குறிப்பிடத்தக்கது. 881 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், 6 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது. இங்கிருந்து மோட்டார் மூலம் புழல் ஏரிக்கு நீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.