தலாய் லாமாவால் உறவு பாதிக்கும்; சீனா மீண்டும் எச்சரிக்கை
எங்கள் பேச்சை கேட்காமல், தலாய் லாமாவுக்கு தொடர்ந்து அழைப்பு விடுப்பதன் மூலம், இந்தியா – சீனா உறவு மேலும் மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது’ என, சீனா எச்சரித்துள்ளது.
சீனா கடும் எதிர்ப்பு:
திபெத் புத்த மதத் தலைவரான தலாய் லாமாவை, பிரிவினைவாதியாக சீனா அறிவித்துள்ளது. அதே நேரத்தில், மதத் தலைவர் என்ற முறையில், தலாய் லாமா மீது இந்தியா மிகுந்த மரியாதை வைத்துள்ளது. சமீபத்தில், அருணாசல பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலாய் லாமா பங்கேற்றார். இதில் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுத்ததற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பீஹார் மாநிலம் நாளந்தாவில், சமீபத்தில் சர்வதேச புத்த மதக் கருத்தரங்கம் நடந்தது. இதில், பங்கேற்க, தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவரும் பங்கேற்றார்.
உறவில் பாதிப்பு:
இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்ஹிங் கூறியதாவது: சீனாவின் கருத்துகளுக்கு, அதன் எதிர்ப்புகளுக்கு இந்தியா செவி சாய்ப்பதில்லை. சர்ச்சைக்குரிய தலாய் லாமாவுக்கு இந்தியாவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கக் கூடாது என, தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்; ஆனால், அதை இந்தியா மதிப்பதில்லை.
இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவில், ஒரு நாடு தெரிவிக்கும் பிரச்னையை மற்ற நாடு மதிக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து, தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம், இந்தியா – சீனா இடையேயான உறவு மேலும் மோசமடையும். இவ்வாறு அவர் கூறினார்.