Breaking News
ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்.. கந்தலான பழைய அட்டைகளுக்கு விடுதலை

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
ரேஷன் பொருட்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் மூலம் இந்த ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. ரேஷன் அட்டை தாரர்களின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் இந்த ஸ்மார்ட் கார்டு உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் கார்டுகள் 5 வகைகளில் இருக்கும். அதன்படி, கார்டில், புகைப்படம் அருகில், ‘பி.எச்.எச்., – ரைஸ்’ என்றிருந்தால், அனைத்து பொருட்களும்; ‘பி.எச்.எச்., – ஏ’ என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் தரப்படும். என்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும். ‘என்.பி.எச்.எச்., – எஸ்’ என்றிருந்தால், சர்க்கரை; ‘என்.பி.எச்.எச்., – என்.சி.,’ என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ‘பான் கார்டு’ வடிவில் இருக்கும். அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், ‘உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை’ என, அச்சிடப்பட்டிருக்கும்.
அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும். பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் ‘கியூ.ஆர்.,’ என்ற ரகசிய குறியீடு இருக்கும். கார்டின் கீழ் பகுதியில், ‘இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது என எழுதப்பட்டிருக்கும்.
மும்பையில் இருந்து தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட உள்ளது. பின்னர் தாலுகா வாரியாக எல்லா ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டை ஸ்வைப் செய்து ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும். நாம் வாங்கிய பொருள் என்னவென்று எஸ்எம்எஸ்ஸாக பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு வந்துவிடும். ரேஷன் கடையில் உள்ள இருப்பு குறித்தும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் நீண்டகாலமாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்காமல் வெறும் உள்தாள் மட்டுமே ஒட்டப்பட்டு வந்தது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.