Breaking News
வருகிறது தனியார் பயணிகள் ரயில்

சரக்கு ரயில்களுக்கான தனி வழித்தடம் அமைக்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தபின், பயன்பாடு குறையக்கூடிய பொது ரயில் தடங்களில், பயணிகள் ரயில்களை இயக்க, தனியாருக்கு அனுமதி வழங்குவது குறித்து, இந்திய ரயில்வே ஆலோசித்து வருகிறது.
பயணிகள் ரயில் போக்குவரத்து வாயிலான வருவாய் குறைந்து வருவதை சமாளிக்க, இத்திட்டம் உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய ரயில்வே, டி.எப்.சி.சி.ஐ.எல்., என்ற பொதுத் துறை நிறுவனத்தின் கீழ், சரக்கு ரயில்களுக்கென, பிரத்யேக சரக்கு ரயில் தடங்கள் அமைக்கும், ‘தனி சரக்கு ரயில் தடம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
சரக்கு ரயில்இதன்படி, ஆறு திசைகளை இணைக்கும் வகையில், 10,300 கி.மீ., துாரத்திற்கு, சரக்கு ரயில் போக்கு வரத்து தடங்கள் அமைக்கப்பட உள்ளன.அவற்றில், கிழக்கு உ.பி.,யில், முகுல்சராய் நகரில் இருந்து, பஞ்சாப் மாநிலம், லுாதியானா நகர் வரையும்; மேற்கு உ.பி.,யில், தாத்ரி நகரில் இருந்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள, ஜவகர்லால் நேரு துறைமுகம் வரையும் உள்ள, 3,300 கி.மீ., ரயில் தடப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.இப்பணிகளை, 2020 டிசம்பருக்குள் முடித்து, சரக்கு ரயில் போக்குவரத்தை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதர, சென்னை – டில்லி; சென்னை – கோவா; மும்பை – ஹவுரா மற்றும் ஹவுரா – விஜயவாடா ஆகிய நான்கு சரக்கு ரயில் தடங்களின் ஆய்வு முடிவடைந்து, இன்னும் பணிகள் துவக்கப்படாமல் உள்ளன.தற்போது, பொது ரயில் தடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், சரக்கு ரயில் போக்குவரத்தில், 70 சதவீதம், தனி சரக்கு ரயில் தடத்திற்கு மாறும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
ஆடம்பர ரயில்கள்அதனால், பொது ரயில் தடத்தில், மேலும் அதிக ரயில்களை இயக்கவும், பயணிகள் ரயில் போக்குவரத்தை விரைவாக மேற்கொள்ளவும் வழி பிறக்கும்.அத்தகைய சூழலில், போக்குவரத்து குறையும் ரயில் தடங்களில், பயணிகள் ரயில்கள், ஆடம்பர ரயில்கள், சரக்கு பெட்டக ரயில்கள் ஆகியவற்றின் போக்குவரத்தை மேற்கொள்ள, தனியாருக்கு அனுமதி அளித்து, வருவாய் ஈட்ட, இந்திய ரயில்வே பரிசீலித்து வருகிறது. ரயில் தடங்களின் திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள உதவும் இத்திட்டம் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அறிக்கை அளிக்கும் பொறுப்பு, ஆலோசனை நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
மொத்த வருவாய்நடப்பு நிதியாண்டில், இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய், 1.17 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இதில், பயணிகள் ரயில் போக்குவரத்து வருவாய், கடந்த நிதியாண்டின் இலக்கை விட, சற்று குறைந்து, 50,125 கோடி ரூபாயை எட்டும். வரும், 2017 – 18ம் நிதியாண்டில், இந்திய ரயில்வேயின் வருவாய், மிகப்பெரிய மாற்றமின்றி, 1.18 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கே இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.