Breaking News
குல்தீப் மிரட்டல் பந்து வீச்சு; ஸ்மித் சதம்; வார்னர், வேட், அரைசதம்: 300 ரன்களுக்கு ஆஸி. சுருண்டது

தரம்சலா டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இன்று ஒரு ஓவரை மட்டுமே ஆடிய இந்திய அணி ரன் எதுவும் எடுக்கவில்லை, விஜய், ராகுல் களத்தில் உள்ளனர்.

இன்றைய ஆட்டத்தின் நாயகர்கள் அறிமுக ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் மற்றும் இந்தியாவுக்கு எதிராக கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 7-வது சதம் கண்ட ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர்களே.

உணவு இடைவேளையின் போது 131/1 என்று ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா உணவு இடைவேளை, தேநீர் இடைவேளைக்கு இடைப்பட்ட ஆட்டத்தில் 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தேநீர் இடைவேளையின் போது 208/6 என்று இருந்தது.

அதன் பிறகு வேட், கமின்ஸ் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 37 ரன்களைச் சேர்த்தனர், 40 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து நிலைகொள்ளும் தருணத்தில் டிரைவ் ஆடும் லெந்தில் வீசுவது போன்ற தோற்றத்தில் ஒரு பந்தை இறக்கினார் குல்தீப், ஆனால் பந்து டிரைவ் ஆடும் லெந்த் அல்ல, கமின்ஸ் குல்தீப்பிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இடது கை ஸ்பின்னர் ஓகீஃப் இறங்கி 2 பவுண்டரிகள் அடித்தார். இந்நிலையில் அஸ்வின் பந்தை வேட் ஸ்கொயர்லெக்கில் அடிக்க அங்கு பதிலி வீர்ர் ஸ்ரேயஸ் ஐயர் நின்று கொண்டிருந்தார், வேட் ஒரு ரன் எடுக்க முயன்றார், பேட்டிங் முனையில் ஓகீஃப் ரன் அவுட் ஆனார். ஸ்ரேயஸ் ஐயர் நன்றாக அந்தப் பந்தை பீல்ட் செய்தார்.

மேத்யூ வேட், 125 பந்துகள் நின்று 4 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஜடேஜாவை ஸ்வீப் செய்யும் முயற்சியில் பவுல்டு ஆனார். ஜடேஜா இன்று அருமையாக வீசியதற்கு வேட் விக்கெட் மட்டுமே பரிசாக கிடைத்தது. நேதன் லயன் இறங்கி 2 பவுண்டரிகள் அடித்து புவனேஷ் குமார் பந்தில் மிட்விக்கெட்டில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற ஹேசில்வுட் 2 ரன்களுடன் ஒரு முனையில் தேங்க ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

குல்தீப் யாதவ் அறிமுக போட்டியிலேயே 23 ஓவர்கள் வீசி 3 மெய்டன்களுடன் 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இன்றைய ஆட்டத்தின் இன்னொரு நாயகன் ஆஸி. கேப்டன் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக தனது கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 7-வது சதம் அடித்தார். இவரை அஸ்வின் வீழ்த்தியதும் இன்றைய ஆட்டத்தின் முக்கியமான அம்சமாகும். கடந்த டெஸ்ட் போல் இவர் நின்றிருந்தால் ஸ்கோர் இன்னும் 50-60 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்குக் கூடுதலாக இருந்திருக்கும்.

இன்றைய ஆட்டத்தின் இன்னொரு அம்சம் தப்பும் தவறுமான ரிவியூக்கள் இல்லை, பேட்ஸ்மென்கள் ஆட்டமிழந்து செல்லும் போது கிறுக்குத்தனமான வழியனுப்புதல்கள் இல்லை. குறிப்பாக ஸ்லெட்ஜிங் இருந்ததாகத் தெரியவில்லை என்று கிரிக் இன்போ வர்ணனை கூறுவது உண்மைதான்.

உணவு இடைவேளை – தேநீர் இடைவேளை: குல்தீப் யாதவ் திருப்பு முனை!

தரம்சலா டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்குப் பிறகான திருப்பு முனைப் பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் தேநீர் இடைவேளையின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது.

உணவு இடைவேளைக்கும், தேநீர் இடைவேளைக்கும் இடைப்பட்ட 2 மணி நேர ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 30 ஓவர்களில் 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் இந்தத் தொடரில் தனது 3-வது சதத்தை எடுத்துச் சாதனை புரிந்து தேநீர் இடைவேளைக்கு சற்று முன் அஸ்வின் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய அபாரமான பந்துக்கு ஸ்லிப்பில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

173 பந்துகளைச் சந்தித்த ஸ்மித் 14 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் எடுத்து அபாரமான இன்னிங்ஸை ஆடி வெளியேறினார். அஸ்வின் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்து ஆஃப் அண்ட் மிடில் ஸ்டம்ப் லைனில் சென்று சற்றே சறுக்கியபடி நேராகச் சென்றது, முன்னால் வந்து ஆட வேண்டிய ஸ்மித் பின்னால் சென்று ஆடி தவறிழைத்ததாலும் பந்து ஆஃப் ஸ்பின் ஆகி நடுமட்டைக்கு வரும் என்று தவறாக கணித்ததாலும் நேராகச் சென்ற பந்து மட்டையின் புறவிளிம்பில் பட்டு கேட்ச் ஆனது.

முன்னதாக உணவு இடைவேளை முடிந்து 56 ரன்கள் எடுத்த வார்னர், குல்தீப் யாதவ் பந்தில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3 ஓவர்களுக்குப் பிறகு ஷான் மார்ஷ் 4 ரன்களில் உமேஷ் யாதவ்வின் ஷார்ட் பிட்ச் பந்தை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடந்த டெஸ்ட் போட்டியின் டிரா நாயகன் ஹேண்ட்ஸ்கம்ப், குல்தீப் யாதவ்வின் லெந்த்தை தொடர்ந்து தவறாகக் கணித்தார், காரணம் குல்தீப் யாதவ்வின் அற்புதமான பந்து வீச்சு, இந்நிலையில் 8 ரன்கள் எடுத்த ஹேண்ட்ஸ்கம்ப், குல்தீப் யாதவ்வின் பந்து ஒன்று ஒரு விநாடி தாமதாகத் திரும்ப அது ஃபுல் பந்து என்று நினைத்து ஹேண்ட்ஸ்கம்ப் ட்ரைவ் ஆட முயல, பேட் கால்காப்பு இடைவெளியில் உள்ளே லேசாகத் திரும்பிய பந்து ஸ்டம்பைத் தாக்கியது.

அபாய வீரர் மேக்ஸ்வெலும் 8 ரன்களில் குல்தீப் யாதவ்வின் ஒரு மேஜிக் பந்துக்கு இரையானார். பந்தின் தையலை குறுக்குவாட்டமாக பிடித்து அவர் லெக் அண்ட் மிடில் திசையில் பந்தை பிட்ச் செய்தார், மேக்ஸ்வெல் பந்தைப் புரிந்து கொள்ளாமல் லெக் திசையில் தட்டி விட்டு ஒரு சிங்கிள் எடுக்கலாம் என்று பார்த்தார், ஆனால் பந்து அந்த லெந்திலிருந்து ஆஃப் ஸ்டம்ப் நோக்கித் திரும்பியது ஸ்கொயர் ஆனார் மேக்ஸ்வெல் பந்து பேடில் பட்டு ஆஃப் ஸ்டம்பில் பட பவுல்டு ஆனார். இது அருமையான ரிஸ்ட் ஸ்பின் பவுலிங் ஆகும், நாம் முன்னரே குறிப்பிட்டது போல் அவர் பந்து எத்திசையில் திரும்பும் என்பது பிட்ச் ஆகும் வரை கணிக்க முடியாததாக உள்ளது, ஆஸி. அணிக்கு குல்தீப் யாதவ்வை கொண்டு அதிர்ச்சி அளிக்கும் திட்டத்தில் இந்திய அணி இதுவரை வெற்றி பெற்றுள்ளது.

உணவு இடைவேளையின் போது அதிரடி 131 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அதன் பிறகு 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது, இது இந்த டெஸ்ட் போட்டியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் குல்தீப் பந்து வீச்சாகும். குல்தீப் யாதவ் 15 ஓவர்கள் 2 மெய்டன்கள் 41 ரன்கள் 3 விக்கெட். உமேஷ் 2 விக்கெட்டுகள் அஸ்வின் மிக முக்கியமான ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக…

முதல் பந்திலேயே வார்னருக்கு கேட்ச் நழுவல்: ஆஸி. அதிரடித் தொடக்கம்

தரம்சலா டெஸ்ட் போட்டியில் கோலி ஆடவில்லை, அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் என்ற இடது கை சைனமேன் ஸ்பின்னர் சேர்க்கப்பட்டுள்ளார், இந்நிலையில் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் என்று அதிரடி தொடக்கம் கண்டுள்ளது.

காயம் காரணமாக விராட் கோலி ஆடாமல் குளிர்பானம் சுமக்க, ஆஸி.கேப்டன் ஸ்மித் பேட்டிங் பொறுப்பைச் சுமந்து அதிரடியாக ஆடி 101 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 72 ரன்களையும், வார்னர் 54 ரன்களையும் எடுத்து களத்தில் இருந்தனர்.

ஆனால் சற்று முன் அறிமுக வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து 56 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார் வார்னர். பந்து ஓரளவுக்குத் திரும்பியது, கையைத் தளர்வாக வைத்து ஆடாமல் உறுதியாக ஆடியதால் ஸ்லிப்பில் ரஹானேயிடம் கேட்ச் ஆனது.

பிட்ச் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்ததோடு, வேகமாக ரன் குவிக்கவும் உதவிகரமாக இருந்து வருகிறது. டென்னிஸ் பந்து போன்றதொரு பவுன்ஸ் கிடைக்கிறது.

புவனேஷ் குமார் வீசிய இன்றைய முதல் பந்திலேயே வார்னருக்கு ஸ்லிப்பில் கையில் வந்த கேட்சை விட்டார் கருண் நாயர்.

யாதவ், புவனேஷ் குமார் இருவருக்கும் நல்ல ஸ்விங், எழுச்சி இருந்தாலும் சிறுபிழையும் பவுண்டரி என்பதாக முடிந்தது. முதல் 13 ஓவர்களில் 10 பவுண்டரிகள் விளாசப்பட்டது, அவ்வப்போது எட்ஜ்களும், கேட்ச் போன்றவைகளும், பீட்டன்களும் இருந்தபடியேதான் டெஸ்ட் போட்டி சென்றது.

உமேஷ் யாதவ்வின் ஒரு பந்து ரென்ஷாவின் தடுப்பு மட்டையைக் கடந்து கால்காப்பில் பட்டு ஸ்டம்பில் பட்டு பவுல்டு ஆனது. ஸ்மித்திற்கு இந்தக் களம் வந்தவுடனேயே பிடித்துப் போனது, பந்து சவுகரியமான பவுன்சில் நம்பகத்தன்மையுடன் வந்ததால் ஸ்மித் விரைவு ரன் எடுக்கத் தொடங்கினார்.

உமேஷ் யாதவ் பந்தில் ஹூக் ஷாட்டை ஸ்மித் சரியாக ஆடாவிட்டாலும் அதிர்ஷ்டம் ஸ்மித் பக்கம் இருந்தது, ஆனால் அவர் தைரியமாக சுதந்திரமாக ஆடினார்.

ஜடேஜா நிறைய வாய்ப்புகளை உருவாக்கியவண்ணம் இருந்தார் அவரது பந்துகள் நன்றாக இறங்கி போதிய அளவு திரும்பின, அவரது லைன் அபாரமாக இருந்ததால் வார்னர், ஸ்மித் இருவருமே ஷாட் ஆடும்போது எட்ஜ்கள் எடுத்தன.

குல்தீப் யாதவ் பந்து வீச்சு இடது கை சைனமன் என்பதால் அதில் ஒரு புதிர்த்தன்மை உள்ளது. பிட்ச் ஆகும் வரைக்கும் பந்து உட்புறமாக திரும்புமா, வெளிப்புறமாகத் திரும்புமா அல்லது நேராக வருமா என்பது தெரியாது.

உணவு இடைவேளை முடிந்து தற்போது ஆஸ்திரேலியா வார்னர், மார்ஷ் விகெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்துள்ளது. சற்று முன் ஷான் மார்ஷ், உமேஷ் யாதவ்வின் ஷார்ட் பிட்ச் எழும்பிய பந்துக்கு உள்ளே வந்து ஆட முயன்றார் ஆனால் பந்து அவர் நகரும் திசை நோக்கி மேலும் எழும்பி வர புல் ஷாட்டை ஆட நினைத்துத் தவிர்க்கும் முயற்சியில் பந்து மட்டையின் அடிவிளிம்பில் பட்டு சஹாவிடம் கேட்ச் ஆனது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.