நடிகர் விஜயை அரசியலில் ஈடுபடுத்த விரும்பவில்லை: எஸ்.ஏ.சந்திரசேகர் தகவல்
“தமிழகத்தில் தற்போது நிலவும் மோசமான அரசியல் சூழலில் நடிகர் விஜயை அரசியலுக்கு கொண்டுவர விரும்பவில்லை” என இயக்குநரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் அவர் மேலும் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை சினிமா ஒன்றே சிறந்த பொழுதுபோக்காக இருந்தது. தற்போது அந்நிலை மாறி விட்டது. பல தகவல் தொடர்பு சாதனங்கள் வந்துவிட்டதால் பொழுது போக்குக்கு பஞ்சமில்லை. தமிழகத்தில் திரைத்துறையை அரசு கண்டுகொள்ளவில்லை.
கர்நாடகாவில் புதிய படம் வெளியானால் திருட்டு சி.டி.யை விற்பனை செய்யமுடியாது. பிறமொழி சி.டி.க்களை வாங்கினாலும் கன்னட சி.டி.க்களை வாங்கமுடியாத அளவுக்கு சினிமாத்துறைக்கு அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. ஆனால், தமிழகத்தில் படம் வெளியாவதற்கு முன்பே திருட்டு சி.டி. வருவது வேதனை அளிக்கிறது. சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பிரச்சினையை நான் ஏற்கமாட்டேன். சட்டப் பேரவை தேர்தல் போன்று தயாரிப்பாளர் சங்கத்துக்கும் போட்டி வந்தால் தவறு இல்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விஜயை அரசியலுக்கு கொண்டுவர நான் விரும்பினேன். நடிகர் என்பதால் அரசியலில் புகழ்பெற முடியும் என எண்ணினேன். காலப்போக்கில் அரசியல் சுத்தம் செய்யமுடியாத சாக்கடை என்பதை உணர்ந்தேன்.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் மிகவும் மோசமான அரசியல் சூழல் உள்ளது. இதுபோன்ற கட்டத்தில் எனது மகனை(விஜய்) அரசியலுக்கு கொண்டுவர நான் விரும்ப வில்லை. அவர் அரசியலுக்கு வரமாட்டார்.
விஜயின் மக்கள்நல இயக்கம் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.