அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல் எப்-16 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க வேண்டும்
அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப எப்-16 ரக போர் விமானங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்க கடந்த ஓராண்டுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை உறுப்பினர்களான விர்ஜினியாவின் குடியரசுக் கட்சியை சேர்ந்த மார்க் வார்னர், டெக்சாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜான் கார்ன்யனும் அமெரிக்கா பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலேயே எப்-16 ரக போர் விமானங்களை விற்பது தொடர்பான ஆலோசனைக்கு டிரம்ப் அரசு நிர்வாகம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், எப்-16 போர் விமானங்களை உள்நாட்டில் தயாரிக்க இந்தியா ஆர்வமுடன் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதன் மூலம் அமெரிக்க ராணுவ தொழில் மையம் பலனடைவதோடு, அமெரிக்கா – இந்தியா இடையேயான ராணுவ ஒத்துழைப்பும் வலுவடையும். மேலும், வடக்கிலிருந்து இந்தியா மேற்கொள்ளும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும், பசிபிக் பிராந்தியத்தில் ராணுவத்தை அதிகரித்து வரும் சீனாவுக்கு சரிசமமாக இந்தியாவின் பலத்தை பெருக்கவும் உதவும்.