‘பெள்ளி சூப்புலு’ தமிழ் ரீமேக்: நாயகனாக விஷ்ணு விஷால் ஒப்பந்தம்
தமிழில் உருவாகவுள்ள ‘பெள்ளி சூப்புலு’ ரீமேக்கில் நாயகனாக விஷ்ணு விஷால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய் தேவரகெண்டா, ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்கு படம் ‘பெள்ளி சூப்புலு’. தருண் பாஸ்கர் இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு விவேக் சாகர் இசையமைத்திருந்தார். தர்மாபாத் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
சுமார் ரூ.2 கோடிக்கும் குறைவான பொருட்செலவில் உருவான இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது. 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான இப்படத்துக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என பலரும் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றினார் இயக்குநர் கவுதம் மேனன். அவருடைய இணை இயக்குநர் செந்தில் வீராசாமி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
தமிழ் ரீமேக்குக்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது. நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகன் கதாபாத்திரத்துக்கு உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு.
இறுதியாக விஷ்ணு விஷால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் ரீமேக்குக்கு ‘பெண் ஒன்று கண்டேன்’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகளை துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.