Breaking News
புற்றுநோயை எதிர்கொள்வது எப்படி?

புற்றுநோய் என்றாலே பலருக்கும் முகத்தில் பயம் அப்பிக்கொள்ளும். உடலில் சிறிய கட்டி வந்துவிட்டால் ‘புற்றுநோயாக இருக்குமோ’ எனச் சந்தேகம் வந்து மனசை அலைக்கழிக்கும். சிலருக்குப் பரம்பரைத் தன்மை காரணமாக ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு தவிர்க்க முடியாததாகவும், இன்னும் சிலருக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். ஆனால், இன்றைய தினம் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய் பாதிப்புகள் மேற்கத்திய உணவுப் பழக்கங்கள், தவறான வாழ்க்கைமுறை, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடல் பருமன், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு போன்றவற்றால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு வெளிவந்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, அடுத்த 20 ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை 70% அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைகிறார்கள் என்றும் அந்தப் புள்ளிவிவரம் எச்சரிக்கிறது. அதேநேரத்தில், பெரும்பாலான புற்றுநோய் பாதிப்புகளைச் சரியான நேரத்தில் கண்டு பிடித்துவிட்டால், அவற்றைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடிய தன்மை கொண்டவை என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

புகையிலையும் புற்றுநோயும்

புற்றுநோய் வருவதற்கான காரணங்களில் முக்கியமானது புகைப்பழக்கம். புகையிலையில் உள்ள பாலிசைக்ளின் அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன், தார், நிகோடின், கார்பன் மோனாக்ஸைடு, அமோனியா, ஃபீனால் போன்ற நச்சுகள் உடல் செல்களைத் தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருப்பதால், மரபணுக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அப்போது செல்கள் தங்கள் இயல்பான வளர்ச்சிப் படிகளைக் கடந்து, வரம்பு மீறிய வளர்ச்சிக்கு உள்ளாகி புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.

வெற்றிலை, பாக்கு, பான்மசாலா, குட்கா, புகையிலை போடுபவர்களுக்கும் மது அருந்துவோருக்கும் புற்றுநோய் வருவது அதிகம். புகையிலையில் உள்ள நச்சுகள் வாய், நாக்கு, கன்னம், தொண்டை, உணவுக் குழாய் ஆகிய இடங்களிலும் மதுவில் உள்ள நச்சுகள் கல்லீரல், இரைப்பை, குடல், மலவாய் போன்றவற்றிலும் புற்றுநோயை உண்டாக்குகின்றன. புகையிலைப் பயன்பாடு மட்டுமே சுமார் 70% நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய் மரணத்துக்குக் காரணமாகிறது.

மேற்கத்திய உணவுப் பழக்கம்

புகையில் வாட்டித் தயாரிக்கப்படும் உணவு களையும், கொழுப்பு மிகுந்த பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளையும் அடிக்கடி அதிக அளவில் சாப்பிடுவோருக்கு இரைப்பை, குடல், மார்பு ஆகியவற்றில் புற்றுநோய் வருகிறது. நார்ச்சத்துள்ள உணவுகளைக் குறைந்த அளவில் சாப்பிடுபவர்களுக்குப் பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குறைந்த அளவு பழங்கள், காய்கறிகள் உண்பது, சுகாதாரம் குறைந்த எண்ணெய்களில் பொரிக்கப்படும் கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது போன்ற பழக்கங்கள் புற்றுநோய் வருவதை ஊக்குவிக்கின்றன.

சூரிய ஒளியில் வரும் புற ஊதாக் கதிர்கள் உடலில் அதிக அளவில் படுமானால் சருமத்தில் புற்றுநோய் வருவதுண்டு. எக்ஸ் கதிர்வீச்சு மற்றும் அணுக்கதிர் வீச்சு காரணமாக ரத்தப் புற்றுநோய், சருமப் புற்றுநோய் வருகின்றன. காய்கறி மற்றும் பழங்களின் விளைச்சலை அதிகப்படுத்துவதற்காக இன்றைக்குப் பலவித பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றில் உள்ள ரசாயனங்கள் குடல் புற்றுநோய்க்கு வழிவிடுகின்றன.

சுற்றுச்சூழல் பாதிப்பு

மாசடைந்த சுற்றுச்சூழலும், தண்ணீர் மற்றும் காற்று மாசுகூட இதற்குக் காரணமாகிறது. அதிகரித்துவரும் வாகனப் புகையும் தொழிற்சாலைக் கழிவுகளும் சுற்றுச்சூழலை அதிக அளவில் பாதித்து, காற்று மண்டலத்தையே மாசுபடுத்தியிருக்கிறது. இந்நிலையில், கட்டுப்பாடான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு நிறையவே உண்டு.

புற்றுநோய் ஏற்பட்டவர்களில் 100-ல் 20 பேர் சிகிச்சை பெற வழி இல்லாமலும், ஆரம்பக் கட்டத்தில் நோயைக் கண்டுபிடிக்க வழி புரியாமலும் புற்றுநோயால் தாக்கப்பட்டிருப்பதே தெரியாமலும் மரணம் அடைகின்றனர். வருடத்துக்கு ரூ.15 லட்சம் கோடி வரி வருமானமுள்ள நம் நாட்டில், புற்றுநோய் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் அடிப்படை சிகிச்சைக்குக்கூட வழியில்லாமல் பலரும் மரணம் அடைவதுதான் வேதனைப்படுத்தும் விஷயம். தேவையான அளவுக்குப் புற்றுநோய் மையங்களோ, சிகிச்சைக்கான வசதிகளோ, அதற்குச் செலவிடக்கூடிய வசதி படைத்தவர்களோ இல்லாத நிலையில், இந்தி யாவில் புற்றுநோயால் தாக்கப்பட்டவர்களின் மரணங்களைத் தவிர்க்க முடியாது.

அதேசமயம் புற்றுநோய் பாதிப்பை ஆரம் பத்தில் கண்டுபிடித்துவிட்டால், அது குணமாகக் கூடியது. முறையான பரிசோதனைகள் மூலம் முதலிலேயே கண்டறியப்பட்டால், மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளைக் குணப்படுத்திவிட முடியும். சுமார் 40% பேரை மரணத்தின் பிடியிலிருந்து விடுவித்துவிட முடியும். இதற்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை நாடு தழுவிய அளவில் ஏற்படுத்துவது அவசியம்.

அரசு என்ன செய்யலாம்?

மத்திய, மாநில அரசுகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்தியாவில் சுமார் 25 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. பல தனியார் புற்றுநோய் சிகிச்சை மையங்களும் பெரும் முனைப்போடு புற்றுநோயாளிகளைக் குணப்படுத்திவருகின்றன. ஆண்டுதோறும் அதிகரித்துவரும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இவை ரொம்பவே குறைவு. இரண்டு அரசுகளும் அதிக அளவில் பரவலாக புற்றுநோய் சிகிச்சை மையங்களைத் தொடங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இது இயலாத நிலையில், தனியார் புற்றுநோய் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கெனத் தனிப்பிரிவு தொடங்குவதை ஊக்குவிக்க வேண்டும். அங்கு வரும் ஏழை நோயாளிகளுக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது குறைந்த கட்டணத்தில் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெறுவதற்கான திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே புற்றுநோய் என்கிற பெரிய சவாலை எதிர்கொள்ள முடியும்; ஏழை இந்தியனைக் காப்பாற்ற முடியும்.

மக்கள் என்ன செய்யலாம்?

புகைபிடிக்க வேண்டாம். மது அருந்த வேண்டாம். புகையிலை, பான்மசாலா போட வேண்டாம். காய்கறி, கீரை, பழம், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிடுங்கள். சிறுதானிய உணவுகளை அதிகப்படுத்துங்கள். கொழுப்பு உணவு, பதப்படுத்தப்பட்ட விரைவு உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்து உடல் பருமனைத் தவிருங்கள்.

40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை ‘மாஸ்டர் ஹெல்த் செக் அப்’ செய்துகொள்ளுங்கள். பெண்கள் 10 வயது முடிந்ததும் ‘ஹெச்பிவி’ தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள்; 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’, மெமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஆண்கள் 40 வயதுக்கு மேல் பிஎஸ்ஏ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைவரும் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுங்கள். புற்றுநோய் நம்மிடமிருந்து விலகி நிற்கட்டும்!

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.