ஜோதிடர்களின் கருத்து கணிப்பு; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
‘தேர்தலின்போது, கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்ட சமயத்தில், ஜோதிடர்களை வைத்து, கணிப்புகளை வெளியிடக் கூடாது’ என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.
உ.பி., உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அப்போது, முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடந்த நாளில் இருந்து, இறுதிகட்ட தேர்தல் நடந்த நாள் வரை, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்து இருந்தது.
ஆனால், சில, ‘டிவி’ சேனல்களில் ஜோதிடர்களை வைத்து, எந்த கட்சி வெற்றி பெறும் என, கணிப்புகள் வெளியிடப்பட்டன. இது குறித்து, தேர்தல் கமிஷனுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் கமிஷன், இது போன்ற கணிப்புகளுக்கு தடை விதித்துள்ளது.
இது குறித்த, தேர்தல் கமிஷனின் அறிவிப்பு: தேர்தலின்போது, கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில், ஜோதிடர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்களை வைத்து, கணிப்புகளை வெளியிடுவதும், சட்டவிரோதமே. இது போன்ற நபர்கள், நிறுவனங்கள், ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.