முஸ்லிம் நாட்டு பயணிகள் விவகாரம்: ட்ரம்ப் ஆணைக்கு நிரந்தர தடை
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பயணத் தடைக்கு ஹவாய் மாகாண நீதிமன்றம் நிரந்தர தடை விதித்துள்ளது.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், சிரியா, இராக், ஈரான், ஏமன், லிபியா, சோமாலியா, சூடான் ஆகிய 7 நாடுகளின் பயணிகள், அகதிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்தார். இந்த உத்தரவுக்கு வாஷிங்டன் மாகாண நீதிமன்றம் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து இராக்கை மட்டும் நீக்கிவிட்டு இதர 6 நாடு களின் பயணிகள், அகதிகளுக்கு தடை விதித்து புதிய ஆணையை பிறப்பித்தார். இந்த ஆணை கடந்த மார்ச் 15-ம் தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து 12-க்கும் மேற் பட்ட மாகாண அரசுகள் அந்தந்த மாகாண நீதிமன்றங்களில் வழக்கு களைத் தொடர்ந்தன. இதில் ஹவாய் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி டெரிக் வாட்சன் கடந்த மார்ச் 15-ம் தேதி, அதிபர் ட்ரம்பின் பயணத் தடை உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தார்.
இந்த வழக்கு நீதிபதி டெரிக் வாட்சன் முன்பு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ட்ரம்பின் பயணத் தடைக்கு நிரந்தர தடை விதித்தார்.
பயணத் தடை வழக்கு விவ காரத்தில் அமெரிக்க அரசு ஏற் கெனவே மேல்முறையீடு செய்துள் ளது. ஹவாய் மாகாண நீதிமன்றத் தின் புதிய உத்தரவை எதிர்த்தும் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.