நேரத்துக்கு சாப்பிடுங்க அல்சரை விரட்டுங்க!
வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்கம், ஸ்ட்ரெஸ் என பல காரணங்களால் இன்று பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் பெப்டிக் அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் பிரச்னை இருக்கிறது. உணவுக்குழாய், இரைப்பை, முன் சிறுகுடல் பகுதியில் ஏற்படும் புண்களையே அல்சர் என்கிறோம். அல்சர் பிரச்னை முற்றிய நிலையில் சிலருக்கு தொண்டையிலும், வாயிலும்கூட புண்கள் ஏற்படக்கூடும். ஆனால், எல்லா வாய்ப்புண்களும் அல்சர் இல்லை. மேல் வயிற்றுவலி, குமட்டல் உணர்வு, வாந்தி, நெஞ்சு எரிச்சல், வயிறு நிறைந்திருக்கும் உணர்வு, பசியின்மை ஆகியவை அல்சரின் ஆரம்ப அறிகுறி. இது ஏற்பட்டதும் மருத்துவரை அணுகி, மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பது, எப்போதும் காரமான, எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வது, நாள்பட்ட மன அழுத்தம் ஆகியவை வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகிறது. அல்சரை கவனிக்காமல் விட்டால், அது புற்றுநோயாக மாறுவதற்குக்கூட வாய்ப்பு இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக்கொள்வது நல்லது. எக்காரணம் கொண்டும் சுய மருத்துவம் கூடாது.சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும், தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்யவேண்டும். இதன்மூலம், மனம் சற்று அமைதி அடைகிறது. காரமும், புளிப்பும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் உணவில் தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் காணப்படும் புரோபயாடிக், வயிற்றுப்புண்ணில் இருந்து நிவாரணம் அளிக்கும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கார்போனேட்டட் பானங்களை தவிர்க்க வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் ஆசிட் தன்மை உள்ள பழங்களை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பிட்டதும் படுக்காமல், குறைந்தது அரை மணி நேரம் உட்கார்ந்து இருக்க வேண்டும். சிறிய நடை பயிற்சிகூட செய்யலாம். படுக்கும்போது தலைப்பக்கம் சற்று உயர்த்தி படுக்கலாம். இடப்பக்கம் மட்டுமே படுக்கவேண்டும். இதனால், இரைப்பையில் உள்ள அமிலங்கள், நொதிகள் மேல்புற குடலுக்கு வந்து எதுக்களித்தல் பிரச்னையை ஏற்படுத்தாது.