5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 71 லட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் முதல்கட்டமாக போலியோ சொட்டு மருந்து நாளை வழங்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து ஏப்ரல் 30-ம் தேதி 2-ம் கட்டமாக வழங்கப்படும். அரசு பள்ளி, அங்கன்வாடி மையம், சுகாதார மையங்கள், மற்றும் அதிகளவில் கூடும் இடங்களில் வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.