ஹெல்த்தியா கொண்டாடுங்க…
‘‘கொண்டாட்டங்கள்தான் நம்மை பக்குவப்படுத்துகிறது, உற்சாகப்படுத்துகிறது. விடுமுறையில்தான் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்கிறோம். அதற்காகத்தான் விடுமுறை என்பதையே அமைத்துக் கொண்டோம். ஆனால், எதற்காகவெல்லாம் விடுமுறை வேண்டும் என்று நினைத்தோமோ அதற்கு மாறாக ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளும் வகையிலேயே வார இறுதி நாட்களை செலவழிக்கும் கலாசாரம் இப்போது பரவலாகி வருகிறது.
வாரம் முழுவதும் பர்ஃபெக்ஷன் பார்க்கிறவர்கள்கூட வார இறுதி நாட்களில் வரம்பு மீறுவதைப் பார்க்கிறோம். வீக்எண்டை ஆரோக்கியமாகவும் கொண்டாட முடியும்’’ என்கிறார் பொது நல மருத்துவர் சிவராம் கண்ணன்.
‘‘வீக்எண்ட் என்றாலேசெய்யக் கூடாததையெல்லாம் செய்துதான் கொண்டாடிக் கழிக்க வேண்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு விஷயம்… வீக் எண்ட் என்பது உங்கள் வேலைக்கும் உங்களுக்கும்தானே ஒழிய, உங்கள் உடலுக்கு கிடையாது. உங்கள் உடலைப் பொறுத்தவரை அது மற்றொரு நாள்.
மிகவும் ஒழுங்கான முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது நம் உடலின் உயிரியல் கடிகாரம்(Biological clock). குறிப்பிட்ட நேரத்துக்கு உண்டு, குறிப்பிட்ட நேரத்துக்குத் தூங்கி வார நாட்களில் உடலைப் பழக்கப்படுத்தியிருப்பீர்கள். திடீரென ஒரு விடுமுறை நாளில் தாமதமான தூக்கம், தாமதமான உணவு என்று அந்த சீரான இயக்கம் குழம்பும்போதுதான் ஆரோக்கியம் கெடுகிறது.
விடுமுறை நாட்களில் வழக்கத்துக்கு மாறாக நெடுநேரம் விழித்திருப்பது, லேப்டாப், செல்போன் என்று எலெக்ட்ரானிக் கேட்ஜெட்டுகளுடன் அளவுக்கதிகமாகப் புழங்குவது, அடுத்த நாள் மிக மிக தாமதமாக எழுவது, அதன் பின்பு வழக்கத்துக்கு மாறான அகால நேரத்தில் உணவு உண்பது போன்றவை அர்த்தமுள்ள கொண்டாட்டங்கள் அல்ல.
இதன் எதிரொலியாக ரத்த அழுத்தம், நீரிழிவு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு, வயிற்றுப்புண், சிறுநீரகக் கோளாறு, தூக்கமின்மை, மன உளைச்சல் போன்ற பல்வேறு ஆரோக்கியக் கேடுகளுக்கு நாமே கதவு திறந்து விடுகிறோம்.முக்கியமாக, இப்போது வீக் எண்ட் என்றாலே மது அருந்துவது என்ற எண்ணம் பலரது மனதில் பதிந்துவிட்டது.
‘ஒருநாள்தானே… அதுவும் கொஞ்சம்தானே…’ என்றும் அலட்சியமாக நினைக்கும் பாங்கு அதிகமாகிவிட்டது. மது என்பது 50 மி.லி. அருந்தினாலும் 1000 மி.லி. அருந்தினாலும் பாதிப்பு ஏற்படுவது நிச்சயம். அதனால் மதுப்பழக்கம் வீக் எண்டில் மட்டும் அல்ல; எப்போதுமே கூடாது.
ஆரம்ப காலத்தில் அதிகம் உழைத்தோம்; அதிகம் உண்டோம். ஆனால், தற்போது அதிகம் சாப்பிட மட்டுமே செய்கிறோம். உடல் உழைப்பு குறைந்துள்ளது. அதனால் நம் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அளவை வீக் எண்டிலும் மாறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக துரித உணவுகள், காரம் நிறைந்த அசைவ உணவுகள், ஹோட்டல் உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
நல்ல புத்தகங்கள் படிப்பது, சுற்றுலா மையங்களுக்குச் செல்வது, உறவினர்களை சந்திப்பது, குடும்பத்துடன் முழுமையாக நேரத்தைச் செலவழிப்பது, கொண்டாட்ட மனநிலையிலும் விழிப்புணர்வோடு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது, சரியான நேரத்துக்குத் தூங்கச் செல்வது போன்ற விஷயங்களில் கவனமாக இருந்தால் வீக் எண்டையும் ஆரோக்கியமாகக் கொண்டாடலாம்…