24-வது நாளாக தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுடன் சந்திப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 24-வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. மத்திய அரசை வலியுறுத்தக் கோரி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் இன்று சந்திப்பு நடத்தினர்.
தமிழகத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் 50 பேரும் இன்று மூன்றாவது நாளாக ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். இவர்கள் உதவியால் இன்று டெல்லியின் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை தமிழக விவசாயிகள் நேரில் சந்தித்தனர்
இது குறித்து ‘தி இந்து’விடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு கூறுகையில், ”மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு இன்று டெல்லி முதல்வரை சந்தித்தேன். அவர் தானே ஜந்தர் மந்தருக்கு நேரில் வர விரும்பியதாகக் கூறி போராட்டத்திற்கு ஆதரவளித்தார். எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை தமிழகம் திரும்பப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.
பி.அய்யாகண்ணு தலைமையிலான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதற்கு, தமிழகம் மற்றும் தேசிய அரசியல் கட்சி தலைவர்களின் ஆதரவு கிடைத்து வருகிறது.
திமுக, அதிமுக உதவியுடன் நிதி, விவசாயம், நதிநீர் மற்றும் உள்துறை ஆகிய மத்திய அமைச்சர்களையும் சந்தித்தனர். திமுக எம்.பி. திருச்சி சிவா விவசாயிகளை சந்தித்து, போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்.
எனினும், பலன் கிடைக்காமல் தொடர்ந்து வரும் போராட்டத்திற்கு சமூக மற்றும் மாணவர்கள் அமைப்புகளின் ஆதரவும் கிடைத்துள்ளது. தமிழகத்தின் மற்ற விவசாய சங்கங்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.