டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி 2-0 என முன்னிலை
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், உஸ்பெகிஸ்தான் வீரர் டெமூர் இஸ்மெயிலோவை வீழ்த்தினார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 இரண்டாவது சுற்றில் இந்தியா – உஸ்பெகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் நேற்று பெங்களூருவில் தொடங்கியது. முதல் நாளில் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் ராம் குமார் ராமநாதன், உஸ்பெகிஸ்தானின் டெமூர் இஸ்மெயிலோவை எதிர்த்து விளையாடினார். இதில் ராம்குமார் 6-2, 5-7, 6-2 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் நடைபெற்றது.
இதையடுத்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன், உஸ்பெகிஸ்தானின் சஞ்சார் பைஸிவ்வை எதிர்த்து விளையாடினார். இதில் குணேஷ்வரன் 7-5, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த வெற்றிகளின் மூலம் இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது.
இன்று இரட்டையர் பிரிவு ஆட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்தியா சார்பில் பாலாஜி, ரோகன் போண்ணா ஜோடி களமிறங்கிறது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி செப்டம்பம் மாதம் நடைபெறும் உலக பிளே ஆப் சுற்றில் விளையாட தகுதி பெறும்.