Breaking News
சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளம்: பேருந்து, கார் சிக்கியதால் பரபரப்பு

சென்னை அண்ணா சாலையில் ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சில நோடிகளில் இந்த விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தை போலீஸ் சுற்றி வளைத்துள்ளனர், போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்லனர். சுமார் 10 அடி பள்ளம் திடீரென ஏற்பட்டதில் அண்ணாசதுக்கத்திலிருந்து சென்னை வடபழனி நோக்கிச் சென்று கொண்டிருந்த தடம் எண் 25ஜி பேருந்தும் ஹோண்டா சிட்டி கார் ஒன்றும் சிக்கியுள்ளது.

தீயணைப்புத் துறையினரும் மீட்புக் குழுவினரும் பேருந்தையும் காரையும் மீட்கும் முயற்சியை மேற்கொள்ளவிருக்கின்றனர். மெட்ரோ நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்கள்.

மெட்ரோ ரயில் திட்ட பணி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக அண்ணாசாலையில் திடீர்ப் பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளம் உடனடியாக மூடப்பட்டது.

தற்போது இந்த இடத்திற்கு அருகில்தான் இன்னொரு திடீர் பள்ளம் முளைத்தது, இதில் பேருந்தும், காரும் கவிழ்ந்துள்ளது.

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்திலிருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதில் 10 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான பேருந்தில் சுமார் 25 பேர் பயணம் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக அண்ணாசாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டை வழியாக செல்லும் பேருந்துகள், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. போக்குவரத்து சீராக குறைந்தது 2 மணிநேரங்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.