அமெரிக்க போர் கப்பல் விரைவு : வடகொரிய பகுதியில் பதற்றம்
வடகொரியா, அடுத்தடுத்து, ஏவுகணை சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்கு அமெரிக்க போர் கப்பல் விரைந்து உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கிழக்காசிய நாடான வடகொரியா, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, தொடர்ந்து ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் சோதனை செய்து வருகிறது; இதை தொடர்ந்து, வடகொரியா மீது, ஐ.நா., பொருளாதார தடை விதித்தது.இருப்பினும், ஐ.நா., எச்சரிக்கையை மீறி, வடகொரியா சோதனைகளை, தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த மாதம், வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தியது.
‘வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக, சீனா, மவுனம் காத்து வரும் நிலையில், இந்த பிரச்னையை, அமெரிக்க தனியாகவே எதிர்கொள்ளும்’ என, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கூறினார். இதையடுத்து, வடகொரியாவிற்கு, பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க போர் கப்பல், வட கொரிய கடல் பகுதிக்கு விரைந்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க கடற்படை மேற்கு பசிபிக் பிராந்திய செய்தித் தொடர்பாளர், டவ் பெக்காம் கூறியதாவது:வடகொரியாவின் ஏவுகணை சோதனையால், கொரிய தீபகற்ப பகுதியில், பதற்றம் நிலவி வருகிறது. எனவே, அமெரிக்க போர் கப்பல் கார்ல் வில்சன், அங்கு விரைந்துள்ளது; எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி அறிவுறுத்திஉள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க போர் கப்பல், கொரிய தீபகற்ப பகுதிக்கு விரைந்துள்ளதால், அங்கு போர் பதற்றம்
ஏற்பட்டுள்ளது.