சுட்டெரிக்கும் வெயில்… ஆபத்திலிருந்து காத்து கொள்வதற்கான அவசர கால வழிமுறைகள்!
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வெயில் 100 பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி வருகிறது. மேலும் அனல்காற்றும் வீசி வருவதால் , உயிரிழப்புகள் ஏற்படு்ம அபாயங்கள் உள்ளன. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. அனல் காற்றால் உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால் தேசிய மற்றும் மாநில அளவிலான வானிலை ஆய்வு மையங்கள் மக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்கி வருகின்றன.
வெளியே போக முடியாமல் இருக்க முடியாது பிள்ளைகளை அழைத்து வருதல், பள்ளி, கல்லூரி, பணி செல்லுதல் உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் நம்மால் வெளியே போகாமல் இருக்க முடியாது. என்னதான் வெயில் வாட்டி வதைத்தாலும் அன்றாட பணிகளை விட்டுக் கொடுக்க முடியாது. எனினும் வந்த பின் அவதிப்படுவதைக் காட்டிலும், வரும் முன்காப்பதே நல்லது.
என்னென்ன நடக்கும் சுட்டெரிக்கும் வெயிலால் நமது உடலின் ஆற்றலானது உறிஞ்சப்பட்டு மயக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் உயிருக்கு ஆபத்து நேரலாம். மேலும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருக்கும். தாங்க முடியாத தலைவலி, நா வறட்சி, நீர் சத்து குறைபாடு, மயக்கம், சுயநினைவின்மை உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். இதை நாம் நேரத்துடன் கவனித்து உரியதை செய்தால் உயிரிழப்பிலிருந்து காத்து கொள்ளலாம்.
வழிமுறைகள் வெயிலில் செல்லும் போது மேற்கொண்ட எந்த அறிகுறிகள் தென்பட்டாலும் நிழலான இடத்துக்கு செல்ல வேண்டும். வேறு யாராவது மயங்கினாலும் அவர்களை சூரிய ஒளி நேரடியாகபடாத இடத்துக்கு அழைத்து செல்ல வேண்டும். உடலை ஈரத்துணியால் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் உடல் உஷ்ணம் அதிகரிப்பதைத் தடுக்கும். உப்பிட்ட மோர், இளநீர், குளுகோஸ் உள்ளிட்ட திரவங்களை அருந்தினால் சற்று நிவாரணமாக இருக்கும். அதன்பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எனவே வெயிலில் செல்பவர்கள் மேற்கண்ட ஏதாவது ஒன்றை கையில் கொண்டு செல்லுங்கள். நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
மயக்கத்தை தடுக்க அவசியமான தேவையை தவிர, வெயில் நேரங்களில் வீட்டை விட்டு செல்வதை தவிர்த்து விடுவது நல்லது என்று வானிலை ஆய்வு மையங்கள் அறிவுறுத்தியுள்ளன. மேலும் வெளியே செல்பவர்கள் தொப்பி, குடை, தலையை கட்ட துணி ஆகியவற்றை உடன் கொண்டு செல்ல வேண்டும். எப்போதும் மெல்லிய பருத்தி ஆடைகளையே அணியுங்கள். விரைந்து மயக்கம் அடைவோரை அனல் காற்று பாதிக்கும். எனவே போதை ஏற்றும் பானங்களை தவிர்க்கவும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.