ரொக்கப் பயன்பாடு அதிகரிப்பு; டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் பின்னடைவு: ஆர்பிஐ தகவல்
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு மீண்டும் வங்கி ஏடிஎம்.களில் பணம் எடுப்பது பிப்ரவரி மாதம் அதிகரித்துள்ளதாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஜனவரியில் ஏடிஎம்களிலிருந்து எடுக்கப்பட்ட ரொக்கம் ரூ. 1.52 லட்சம் கோடி என்றால் பிப்ரவரியில் ரூ.1.93 லட்சம் கோடி என்கிறது ஆர்பிஐ. அதாவது இப்படியே போனால் பணமதிப்பு நீக்கத்துக்கு முன்பிருந்த ரொக்கப் பரிவர்த்தனை மட்டத்திற்கு செல்லும் என்கிறது ஆர்பிஐ.
நவம்பர் 9, 2016 பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ஏடிஎம்களில் பணம் எடுப்பு பாதியாகக் குறைந்தது, அக்டோபரில் பாதியானது டிசம்பரில் மேலும் குறைந்தது. அதே வேளையில் இந்தக் காலக்கட்டத்தில் டெபிட் கார்டுகள், பிஓஎஸ் எந்திரப் பயன்பாடுகள் அதிகரித்திருந்தன. அதாவது இரட்டிப்புக்கும் அதிகமாக இந்தக் காலக்கட்டத்தில் ரூ.58,031 கோடி தொகைக்கு டிஜிட்டலில் பரிவர்த்தனை நடந்துள்ளது.
ஆனால் தற்போது மறுபணமதிப்பாக்கம் விரைவுகதியில் நடைபெற்று வருவதால் பிப்ரவரியில் மீண்டும் ரொக்கப் பரிமாற்றங்கள் அதிகமாகி டிஜிட்டல் பரிமாற்றங்கள் குறைந்துள்ளன என்கிறது ஆர்பிஐ தரவுகள்.
மார்ச் 31-ம் தேதி மொத்த பணசுழற்சி ரூ.13.32 லட்சம் கோடி. அதாவது நவம்பர் 8-க்கு முன்பாக இது ரூ.17.97 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது இதில் 76% எட்டப்பட்டுள்ளது, எனவே மீண்டும் ரொக்கப் புழக்கம் என்பது பணமதிப்பு நீக்கத்திற்கு முந்தைய நிலையை எட்டிவிடும் என்கிறது ஆர்பிஐ தரவுகள்.