Breaking News
கொல்கத்தாவுடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் பஞ்சாப்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

இரு அணிகளும் இதுவரை 19 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் கொல்கத்தா 13 ஆட்டங்களிலும், பஞ்சாப் 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் இம்முறை பஞ்சாப் அணி வலுவாக உள்ளது. மேலும் கொல்கத்தா அணியின் அதிரடி வீரரான கிறிஸ் லின் தோள்பட்டை காயம் காரணமாக தொடரில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது கொல்கத்தா அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ் லின், குஜராத் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 41 பந்துகளில் 93 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி சாதனை படைத்திருந்தது. அதேவேளையில் அவர் காயம் அடைந்த 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வியடைந்தது.

இன்றைய ஆட்டத்தில் வேகப் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் களமிறங்க உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய அவரின் வருகையால் கொல்கத்தா அணியின் பந்து வீச்சு மேலும் பலம்பெறும் என கருதப்படுகிறது.

உமேஷ் யாதவ் களமிறங்குவதால் அங்கித் ராஜ்புத் நீக்கப்படுவார். அங்கித், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் 19 ரன்களை வாரி வழங்கியிருந்தார். பேட்டிங்கில் கிறிஸ் லின் இடத்தில் ராபின் உத்தப்பா களமிறக்கப்படுவார் என தெரிகிறது. கடந்த சீசன்களில் காம்பீருடன், உத்தப்பா தொடக்க வீரராக விளையாடி உள்ளார்.

மேலும் கிறிஸ்லினுக்கு பதிலாக வெளிநாட்டு வீரராக ஷாகிப் அல்-ஹசன், டிரென்ட் போல்ட், கிறிஸ்வோக்ஸ் ஆகியோரில் யாரவது ஒருவர் இடம்பெறக்கூடும். கடந்த ஆட்டத்தில் 41 பந்துகளில் 81 ரன்கள் விளாசிய மணீஷ் பாண்டேவிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப் படக்கூடும்.

கிங்ஸ்லென் பஞ்சாப் அணி அதிகபட்சமாக கடந்த 2014-ல் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது. இம்முறை சேவக்கின் ஆலோசனையால் அந்த அணி திறம்பட செயல்பட்டு வருகிறது. புனே, பெங்களூரு அணிகளை வீழ்த்திய நிலையில் தற்போது ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் கொல்கத்தாவை சந்திக்கிறது.

கேப்டன் மேக்ஸ்வெலின் அதிரடி அணிக்கு பலம் சேர்க்கிறது. புனே அணிக்கு எதிராக அவர் 20 பந்துகளில் 44 ரன்களும், பெங்களூரு அணிக்கு எதிராக 22 பந்துகளில் 43 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார்.

பந்து வீச்சில் இன்றைய ஆட்டத்தில் இஷாந்த் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். அனுபவ வீரரான அவர் கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்படக்கூடியவர். கடந்த ஆட்டத்தில் மோகித் சர்மா 4 ஓவர்கள் வீசி 47 ரன்கள் தாரை வார்த்திருந்தார். இதனால் அவர் நீக்கப்பட்டு இஷாந்த் சேர்க்கப்படக்கூடும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கிளென் மேக்ஸ்வெல்(கேப்டன்), டேவிட் மில்லர், மனன் வோரா, அக் ஷர் படேல், குர்கீரத் சிங், அனுரீத் சிங், சந்தீப் சர்மா, ஷான் மார்ஷ், விருத்திமான் சாஹா, நிகில் நாயக், மோகித் சர்மா, மார்க்ஸ் ஸ்டோனிஸ், கே.சி.கரியப்பா, அர்மான் ஜாபர், பிரதீப் ஷாகு, ஸ்வப்னில் சிங், ஹசிம் ஆம்லா, மோர்கன், ராகுவல் டிவாட்டியா, நடராஜன், மேட் ஹென்றி, வருண் ஆரோன், மார்ட்டின் குப்தில், டேரன் சமி, ரிங்கு சிங்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், செஷல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லைன், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.