Breaking News
உடல் உஷ்ணத்தை போக்கும் மருத்துவம்

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். கோடைகாலத்தில் வெயில் காரணமாக உடல் உஷ்ணம் அதிகமாகும். இதனால் ஏற்படும் பிரச்னைகளை உளுந்து, பாசிப்பயறு, அரிசி போன்றவற்றை பயன்படுத்தி சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட உளுந்து உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. பச்சைபயறு இரும்புச்சத்து, புரதச்சத்தை உள்ளடக்கியது. குளிர்ச்சி தன்மை கொண்ட இது நோயுற்றவர்களுக்கு மருந்தாகிறது. அரிசி உடலுக்கு குளிர்ச்சி தரும் உன்னத உணவாகிறது.

அரிசியை பயன்படுத்தி உடல் உஷ்ணத்தை போக்கும் கஞ்சி தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: அரிசி, வெல்லம், பச்சை பயறு, ஏலக்காய், பால்.
செய்முறை: புழுங்கல் அரிசியை வறுத்து பொடி செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது வெல்லம் போட்டு நீர்விட்டு கரைக்கவும். இதனுடன் வேகவைத்த பச்சை பயறு, கரைத்து வைத்திருக்கும் அரிசி மாவை சேர்க்கவும். சூடானவுடன் நன்றாக கிளறவும். இதில், காய்ச்சிய பால், சிறிது ஏலக்காய் சேர்க்கவும். இந்த கஞ்சியை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி அடையும். இது, நோயுற்றவர்களுக்கு பலம் தரக்கூடியதாக அமைகிறது. குழந்தைகளுக்கு இந்த கஞ்சியை கொடுத்துவர ஆரோக்கியம் மேம்படும்.
குளிர்ச்சி தரும் பாசி பயறு லட்டு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பாசி பயறு, சர்க்கரை, ஏலக்காய், நெய். செய்முறை: பாசி பயறுவை வறுத்து பொடி செய்து எடுக்கவும். இதனுடன் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து, சூடான நெய் ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும். இதை சிறார்கள் விரும்பி உண்பார்கள். இது உடலுக்கு வலிமை தரக்கூடியது. எலும்புகளுக்கு பலம் கொடுக்கும். உடல் குளிர்ச்சி அடையும். குடல் புண்களை ஆற்றும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் பச்சை பயறு, கருப்பு உளுந்து களி தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: பச்சை பயறு, கருப்பு உளுந்து, வெல்லம், நெய், ஏலக்காய்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது வெல்லம் எடுத்து நீர்விட்டு கரைக்கவும். இதனுடன் வேகவைத்து வைத்திருக்கும் பச்சை பயறு, நீர்விட்டு கரைத்த கருப்பு உளுந்து மாவு சேர்க்கவும். இது வெந்ததும் நெய், ஏலக்காய் சேர்க்கவும். பின்னர், நெய்விட்டு கலந்து எடுக்கவும். இந்த களியை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி அடையும். எலும்புகள் பலம் பெறும். உள் உறுப்புகளை குளிரூட்டும் உணவாகிறது. சிறுநீர்தாரை, ஆசனவாயில் எற்படும் எரிச்சல், வயிற்றில் உண்டாகும் எரிச்சலை போக்கும்.

கோடைகாலத்தில் ஏற்படும் வியர்வையை ஈடுகட்டும் வகையில், தண்ணீர் குடிப்பது அவசியம். அடிக்கடி நீர் பருகுவதன் மூலம் நம்மை காத்துக்கொள்ள முடியும்.வெயிலில் சென்றுவிட்டு வரும்போது ஏற்படும் உடல் எரிச்சலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இதற்கு கேரட் சாறு மருந்தாகிறது. கேரட் சாறு குடித்துவர உள் உறுப்புகள் குளிர்ச்சி அடையும். கேரட் சாற்றை மேல் பற்றாக போடும் போது, தோலில் ஏற்படும் கருமை நிறம் மறையும். தோல் இயல்பான தன்மையை அடையும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.