Breaking News
‘சேது’வுக்கு பிறகு மீண்டும் விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’: ஸ்ரீமன் நெகிழ்ச்சி

‘சேது’ படத்துக்குப் பிறகு மீண்டும் விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடிக்கும் ஸ்ரீமன் நெகிழ்ச்சியில் உள்ளார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் ‘ஸ்கெட்ச்’. இப்படத்தில் ‘சேது’ படத்துக்குப் பிறகு விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார் ஸ்ரீமன். மேலும், ‘சேது’ படப்பிடிப்பு நடந்த அதே வீட்டில் ‘ஸ்கெட்ச்’ படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.

அந்த அனுபவங்கள் குறித்து ஸ்ரீமனிடம் கேட்ட போது, “‘சேது’ படத்துக்கு முன்பே நானும், விக்ரமும் நெருங்கிய நண்பர்கள். அவருக்கு நான் நடனத்தையும், எனக்கு அவர் நடிப்பையும் கற்றுக் கொடுத்தார். இதை நாங்கள் கலா மாஸ்டர் பள்ளியில் இருக்கும் போது பழகுவோம்.

‘சேது’வுக்கு முன்பாகவே எங்கள் இருவருக்குமே ஒரு பெரிய வாய்ப்பு ‘புதிய மன்னர்கள்’ படம் மூலமாக அமைந்தது. எனக்கு அதுதான் முதல் படம். கிட்டதட்ட அண்ணன் – தம்பி போலத் தான் பழகுவோம். நிறைய விஷயங்கள் பேசிக் கொள்வோம். நாம் இருவரும் இணைந்து நடிப்பதற்கு சரியான கதாபாத்திரம் அமைய வேண்டும் என்று சொல்வார். எங்கள் இருவருக்குமே ‘சேது’ ஒரு முக்கியமான படமாக அமைந்தது.

அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டிய படம் ‘தில்’. அதில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. மீண்டும் விக்ரமுடன் நடிக்க நல்ல வாய்ப்புக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன். அது விஜய் சந்தர் சாருடைய ‘ஸ்கெட்ச்’ படம் மூலமாக அமைந்துள்ளது.

எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதற்காக கொஞ்சம் உடல் எடையை அதிகரித்துள்ளேன். இத்தனை வருடங்கள் கடந்தாலும் விக்ரமிடம் எந்ததொரு மாற்றமுமில்லை. ‘சேது’வுக்கு முன்னால் கென்னி என்ற பெயரில் தான் அழைப்போம். அப்போது எப்படியிருந்தாரோ அப்படித் தான் இப்போது இருக்கிறார். அவருடைய பெயருக்கு பின்னால் தேசிய விருதுகள் இணைந்திருப்பதை எல்லாம் பேச்சில் காட்டிக் கொள்ளவே இல்லை.

’சேது’ படப்பிடிப்பு நடத்திய வீட்டில் தான் ‘ஸ்கெட்ச்’ படமும் படமாக்கி வருகிறார்கள். ஆகையால் இருவருமே இங்கு தானே படப்பிடிப்பு நடந்தது என்று பழைய நினைவுகளில் நிறைய மூழ்கினோம். எங்கள் இருவரையுமே நல்ல நடிப்பார்கள், கண்டிப்பாக கதாபாத்திரங்கள் கொடுக்கலாம் என்று மற்ற இயக்குநர்களுக்கு நம்பிக்கை அளித்த படம் ‘சேது’. முதலில் அந்த வீட்டுக்குச் சென்றவுடன் எங்கள் இருவரிடமும் மெளனம் தான் இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பு மிகவும் சுவாரசியமாக இருந்தது.

படப்பிடிப்பில் நான் இந்தக் காட்சியை இப்படி மாற்றி பண்ணட்டுமா என்று கேட்டு நடிப்பேன். அப்போது அது எனக்கு பெயர் வரக்கூடிய காட்சியாக இருந்தாலும், விக்ரமும் இப்படி செய்யுங்கள் இன்னும் நன்றாக இருக்கும் என்பார். நடிகர்களை ஊக்குவிப்பது என்பது அவரிடம் இருக்கும் மிக முக்கியமான குணமாகப் பார்க்கிறேன்.

நல்ல மெச்சூர் ஆயிட்டா.. நிறைய கதாபாத்திரங்களில் நடிக்கிற என்று ரொம்ப பாராட்டினார். இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் விஜய் சந்தர் சாருக்குத் தான் நன்றி சொல்லணும்” என்று தெரிவித்தார் ஸ்ரீமன்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.