புடவை கட்டி விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் 32-வது நாளாக நீடிப்பு
டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் புடவை கட்டி போராட்டம் நடத்தினர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 14ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 31வது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. 5 பெண்கள் உட்பட 125 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தினம் ஒரு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நேற்று, குட்டிக்கரணம் அடிக்கும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் 32வது நாளாக இன்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் புடவை கட்டி, தலையில் முக்காடிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நூதன போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதுகுறித்து, அய்யாக்கண்ணு கூறியதாவது: எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் இதுவரை மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற செவிசாய்க்காமல் இருக்கிறார். வெளிநாட்டு அதிபர்கள், தூதர்களையெல்லாம் சந்திப்பதற்காக பல மணிநேரம் ஒதுக்கும் மோடி, தமிழக விவசாயிகளுக்காக சில நிமிடங்கள் ஒதுக்க தயங்குவது ஏன்?. மத்திய அரசு விவசாயிகளை ஏமாற்றும் நோக்குடன் செயல்படுவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. தமிழக விவசாயிகள் அனைவரும் இன்று புடவை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதை பார்த்தாவது எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எவ்வித நடவடிக்கைகளிலும் இறங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.