புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம்
புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூரில் தமிழக அரசின் தலைமை கொறடா ராஜேந்திரன் வீட்டை பொதுமக்கள் முற்றுக்கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்த மதுக்கடையை அய்யப்பன் ஏரி அருகே அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் அரியலூர் தாமரைக்குளத்தில் உள்ள கொறடா வீட்டை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினர்.
பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து கொறடா ராஜேந்திரன் பொதுமக்களை சமாதானப்படுத்தினார். புதிய மதுக்கடை திறக்கப்பட மாட்டாது என அவர் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. தருமபுரி மாவட்டம் குருபரஹள்ளி கூட்ரோடு பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனால் ஏற்பட்ட பரபரப்பை அடுத்து வட்டாட்சியரும் காவல்துறை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் படுத்த முயன்ற போது அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அறிவழகன் என்பவர் அருகில் இருந்த மின்கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அறிவழகனை சமாதானப்படுத்தி கீழே இறங்கினர். மதுக்கடையை மாற்று இடத்தில் அமைக்கபடும் என உறுதியளித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதே போல் நெல்லையில் புதிய மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்போர் நலசங்கத்தின் கூட்டமைப்பினர் தியாகராஜன் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3000க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டது. அந்த கடைகளை மாற்று இடத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.