Breaking News
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் குகை மீது ராட்சத குண்டை வீசியது அமெரிக்கா : 36 தீவிரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் குகை மீது அமெரிக்க விமானப்பபை ‘ஜிபியு-43/பி மாப்’ என்ற 10 ஆயிரம் கிலோ எடைகொண்ட ராட்சத குண்டை வீசியது. வெடிகுண்டுகளின் தாய் என அழைக்கப்படும் இந்த குண்டு வீச்சு தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் 36 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா, ஈராக் எல்லையில் இஸ்லாமிய தனி நாடு அமைப்பதற்காக ஐஎஸ் தீவிரவாதிகள் கடுமையான போர் நடத்தி வருகின்றனர். சிரியாவில் அரசு படையினர் ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈராக்கிலிருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்படுகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் உள்ள நங்கர்கர் என்ற பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அதிகளவில் முகாமிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் அச்சின் மாவட்டத்தில் உள்ள மோமண்ட் டாரா என்ற பகுதியில் உள்ள குகைகள்தான் ஐ.எஸ் தீவிரவாதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது.

இங்கிருந்துதான் ஆப்கானிஸ்தான் படையினர் மற்றும் அமெரிக்க படையினர் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஐ.எஸ் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மோமண்ட் டாரா குகை பகுதியில் ‘ஜிபியு-43/பி மாப்’ என்ற சுமார் 10 ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டை வீச அமெரிக்க விமானப்படை முடிவு செய்தது. அணு ஆயுதம் இல்லாத வகையைச் சேர்ந்த இந்த குண்டு வெடிகுண்டுகளின் தாய் என அழைக்கப்படுகிறது. கடந்த 2003ம் ஆண்டு இந்த குண்டு சோதனை செய்யப்பட்டது. அதன்பின் இந்த குண்டு போரில் பயன்படுத்தப்படவே இல்லை. இந்த குண்டு தரைக்கு மேலே வெடிக்கும். அப்போது ஏற்படும் மிகப் பயங்கரமான அழுத்தத்தில் குகைகள் நொறுங்கும்.

இந்த குண்டை ஆப்கானிஸ்தானின் மோமண்ட் டாரா குகை மீது அமெரிக்க விமானப்படை விமானம் எம.சி-130 என்ற சரக்கு விமானம் நேற்று முன்தினம் மாலை வீசியது. அப்போது மிகப் பெரிய சத்தம் கேட்டதாக அச்சின் மாவட்ட ஆளுநர் இஸ்மாயில் ஷின்வாரி தெரிவித்துள்ளார். இந்த குண்டு வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக தெரியவில்லை. ஆனால் 36 தீவிரவாதிகள் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த குண்டுவெடிப்பில் யாரும் உயிரிழக்கவில்லை என்கிறது ஐஎஸ்.

அதிபர் டிரம்ப் பாராட்டு

இந்த குண்டு வெற்றிகரமாக வீசப்பட்டதற்கு அமெரிக்க ராணுவத்தினருக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து வாஷிங்டனில் அவர் அளித்த பேட்டியில்,‘‘ நமது ராணுவத்தினரால் நாம் பெருமை அடைகிறோம். இது மற்றொரு வெற்றிகரமான சம்பவம். என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். உலகிலேயே மிகச் சிறந்த ராணுவத்தை நாம் வைத்துள்ளோம். நான் ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளிக்கிறேன். அவர்கள் தங்கள் பணியை வெற்றிகரமாக செய்துள்ளனர்’’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.