Breaking News
இரு அணிகளும் இணைந்தால்தான் ‘இரட்டை இலை’ சின்னம் கிடைக்கும் – அதிமுக மூத்த நிர்வாகி தகவல்

ஆதரவாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக யாருக்கு என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்யாது. எனவே, இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே கட்சி, இரட்டை இலை சின்னத்தை மீட்கமுடியும் என்று, இரு அணிகளையும் சாராத மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் அணி – சசிகலா அணி என பிளவு ஏற்பட் டதைத் தொடர்ந்து, இந்த 2 அணிகளும் கட்சியின் அதிகாரப் பூர்வ சின்னமான இரட்டை இலைக்கு உரிமை கோரின. கட்சிப் பெயர், சின்னம் முடக்கப்பட்டதால், இரு அணிகளும் புதிய கட்சிப் பெயர்களில் போட்டியிட்டன. தேர்தல் முடிந்து ஏப்ரல் 17-ம் தேதி இரு தரப்பும் ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் அறிவித்தது. பணப் பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக தற்போது கட்சி யையும், அதன்மூலம் இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்ற இரு தரப்பும் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.

அதிமுக கட்சி விதி 20 பிரிவு 2-ல், ‘கட்சியின் பொதுச் செயலாளர் தமிழகத்தில் உள்ள அதிமுகவின் அனைத்து பிரிவுகளின் அடிப்படை உறுப்பினர்கள் மற்றும் ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, அந்தமான் தீவுகளில் உள்ள அதிமுக உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. அதே விதி பிரிவு 5-ல், ‘ஏதேனும் காரணத்தால் பொதுச் செயலாளர் பதவி காலியாக இருந்தால், புதிய பொதுச் செயலா ளர் தேர்வு செய்யப்படும் வரை முன்னாள் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள், கட்சியை தொடர்ந்து வழிநடத்துவர்’ என கூறப்பட்டுள்ளது. இதை சுட்டிக் காட்டியே, பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என ஓபிஎஸ் அணி வாதிட்டு வருகிறது.

இதுதொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியபோது, ‘‘அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்யவேண்டும். இந்த விதியை யாராலும் திருத்தம் செய்ய முடியாது என்று கட்சி விதிகளில் எம்ஜிஆர் திட்டவட்டமாக வரை யறுத்துள்ளார். தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுத்து, இரண்டில் ஒரு தரப்பினருக்கு சின்னத்தைக் கொடுத்திருந்தால் சிக்கல் பெரிதாகியிருக்கும். ஆனால், ஆணையம் தற்காலிகமாக முடக்கிவைத்து, இரு அணிகளும் ஒற்றுமையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது’’ என்றார்.

இந்த நிலையில், இரு தரப்பும் தங்களுக்கு ஆதரவானவர்கள் பட்டியலை தயாரித்து வருகின்றன. கூடுதல் ஆவணங்களை சேகரிக்க சசிகலா தரப்பு 8 வார அவகாசம் கேட்டுள்ளது.

ஆனால், அதிமுகவின் விதிகளில் பெரும்பான்மை ஆதரவு குறித்த பேச்சுக்கே இடமில்லை என்கிறார் இரு அணியையும் சாராத மூத்த நிர்வாகி ஒருவர். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

பெரும்பான்மை ஆதரவு அடிப் படையில் கட்சியை ஒரு அணியிடம் ஆணையம் கொடுத்துவிடாது. கட்சி விதிகளின்படியே தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். அதற்கு பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கட்சி விதிப் படி, சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தினால், அவர் செய்த நியமனங்களும் செல்லாது.

அடுத்ததாக, விதிகளின்படி முந்தைய பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளான இ.மதுசூதனன், முன்னாள் முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், தற் போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து கட்சியை வழிநடத்தலாம். பொதுச் செயலாளர் தேர்தலையும் நடத் தலாம். எப்படியானாலும், இவர்கள் இணைந்தால் மட்டுமே அதிமுக காப்பாற்றப்படும். இதையே தொண் டர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுப்பினர் பட்டியலை மாற்ற முடியுமா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை, அதிமுக பொதுச் செயலாளராக அவரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கடைசியாக நடந்த பொதுச் செயலாளர் தேர்தலின்போது, இறுதியாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள். அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த பட்டியல் உள்ளது. நிர்வாகிகளுக்கும் எண்ணிக்கை தெரியும். எனவே, இதை மாற்றி புதிதாக உறுப்பினர்களை சேர்த்து எண்ணிக்கையை யாரும் அதிகரித்துக் காட்ட முடியாது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.