Breaking News
உயிர்தெழுந்தார் தேவ பிதா: தேவாலயங்களில் ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளை கிறிஸ்தவர்கள் இன்று கோலாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளையே கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கி.பி. 29ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது. எனினும் கி.பி. 325இல் அப்போதைய ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட மாமன்னர் கான்ஸ்டைன் காலத்தில் இருந்துதான் ஈஸ்டர் பிரபலமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை விளக்கி தனியாக சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. ஈஸ்டர் என்ற வார்த்தைக்கு “வசந்த காலம்” என்ற அர்த்தமும் உண்டு. உலகை உய்விக்க ரட்சகராய் அவதரித்த இயேசு கிறிஸ்து, 30 வயது வரை பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். பின்னர், யோவான் என்ற ஞானியிடம்ஞானஸ்நானம் பெற்ற பின், கடவுளின் மைந்தனாக அவரது திருப்பணிக்கு தன்னை அர்ப்பணித்தார். உலக மீட்பிற்கான இறைவனின் திட்டத்தை மக்களுக்கு விளக்கி போதனை செய்தார். தனது 12 சீடர்களுடன் சமூகத் தொண்டு செய்தார். இரவும் பகலும் இடைவிடாது மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நல்வழிகளை போதித்தார். பல அற்புதங்களை புரிந்த அவர் மீது மதகுருமார்கள் கோபம் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில், உடனிருந்த சீடர்களினால் காட்டி கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டார். அந்த நாள் புனித வெள்ளியாகவும், அன்றிலிருந்து அவர் உயிர்தெழுந்த மூன்றாம் நாள் ஈஸ்டர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. உலகத்தில் உள்ள மனிதர்களின் பாவத்திற்காக இயேசு கிறிஸ்து தம் ஜீவனை கொடுத்து நீதிக்காக உயிர்தெழுதலை போற்றும் விதமாக கிறிஸ்தவர்களால் இந்த தினம் ஈஸ்டர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் முன்னிட்டு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று நள்ளிரவில் திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இவற்றில் மக்கள் புத்தாடை அணிந்து கையில் மெழுகு வர்த்தி ஏந்தியவாறு உற்சாகமாக பங்கேற்றனர். பட்டாசுகள் வெடித்து ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பலியில் பங்கேற்ற இறைமக்கள் தங்களின் திருமுழுக்கை புதுப்பித்துக் கொண்டனர். திருப்பலி மற்றும் ஆராதனைகள் முடிந்த பிறகு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து, இன்று காலையும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. அதிலும், ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.