‘டேட்டிங் கிளப் மோசடி’ : இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த ஐடி-க்கள் மூலம் நூற்றுக்கணக்கான சிம் கார்டுகள் வாங்கியது அம்பலம்
இந்த மாதத் தொடக்கத்தில் சைபர் போலீஸ் சிலரைக் கைது செய்த ‘டேட்டிங் கிளப்’ மோசடி தொடர்பாக மேலும் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐவரும் கூகுள் தேடல் எந்திரத்தைப் பயன்படுத்தி வெகு எளிதாக இணையதள ஐடிக்களை பதிவிறக்கம் செய்து நூற்றுக்கணக்கான சிம் கார்டுகளைப் பெற்றுள்ளனர்.
கூகுள் தேடலில் படங்கள் தேடலில் எலெக்ஷன் ஐடி என்று தேடல் சொல்லை இட வேண்டியது, இதில் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் படமாக அவர்களுக்கு கிடைக்கும் இதில் தங்களுக்கு பயன்படும் ஐடிக்களை எடுத்துக் கொண்டு சிம்கார்டுகளை பெற்றுள்ளனர்.
மொபைல் தொலைபேசி சேவை நிறுவனங்கள் சிம்கார்டு கோரும் நபர்களின் உண்மையான அடையாளம் என்ன, அது சரியானதுதானா என்பதை சரிபார்க்கும் முறைமைகள் சரியாக இல்லாதது இத்தகைய டேட்டிங் கிளப் ஆசாமிகளுக்கு முறைகேடு செய்ய சாதகமாகியுள்ளது.
இதே சிம்கார்டுகளைக் கொண்டுதான் பேடிஎம் கணக்குகள் தொடங்கப்பட்டன, இதில்தான் இந்த முறைகேட்டில் பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்தினர்.
ஒவ்வொரு மாதமும் இதற்காகவென்றே பழைய கணக்குகள் மூடப்பட்டு, புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன, ஏனெனில் அப்போதுதான் அகப்பட்டுக் கொள்வதிலிருந்து தப்பிக்க முடியும் என்பதால் இந்த நூதன முறையைக் கையாண்டுள்ளனர்.
தானேயில் சைபர் போலீஸால் பிடிக்கப்பட்ட இந்த டேட்டிங் கிளப் கும்பல் கிளப்புகளில் உறுப்பினர்களாக சேர்த்து விடுவதாக தெரிவித்துள்ளனர், இது ஏதோ சாதாரண கிளப்புகள் அல்ல ரூ.1000 என்ற ஒரே தவணை பணம் செலுத்துதல் மூலம் பாலியல் உறவுகளில் ஈடுபட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட ஒரு 3 கிளப்புகளை இணையதளத்தில் திறந்துள்ளது இந்த டேட்டிங் கும்பல். முற்று முழுதான பாதுகாப்புடன் கூடிய, விஷயம் ஒரு துளியும் வெளியே தெரியாது என்ற வாக்குறுதிகளுடன் விடுதி அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வந்துள்ளன.
இந்தக் கும்பல் பிடிபட்டவுடன் இவர்களிடமிருந்து சுமார் 310 சிம்கார்டுகளை சைபர் போலீஸ் கைப்பற்றியுள்ளனர். அப்போதுதான் விசாரணையில் இவ்வளவு சிம்கார்டுகளை எப்படிப் பெற முடியும் என்பது தெரியவந்துள்ளது.
எவ்வளவோ நபர்கள் எத்தனையோ நோக்கங்களுக்காக தங்கல் பெயர், முகவரி, வேலை உள்ளிட்ட சொந்த விவரங்களுடன் கூடிய ஆவணங்களை இணையதளத்திற்கு அளித்துள்ளனர், அதில் தங்கள் தேவைக்கேற்ப சில நபர்களி ஆவணங்களை பயன்படுத்தி சிம்கார்டுகளைப் பெற்றுள்ளதாக சைபர் கிரைம் உதவி ஆணையர் அகிலேஷ் சிங் தெரிவித்தார்.
இது பொதுவாக நடைபெறும் குற்றமே…
சிம்கார்டுகளை வாங்க இணையதளத்திலிருந்து வேறொருவர் புகைப்படம், ஆவணங்களை பயன்படுத்துவது இது முதல் தடவையல்ல என்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில் மொபைல் சேவை நிறுவனங்கள் இந்த ஐடிக்கள் சரியானதுதான் என்பதை சரிபார்ப்பதில்லை. ஆவணங்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க மொபைல் சேவை நிறுவனங்கள் வழிமுறைகள் எதையும் வைத்துக் கொள்வதில்லை.
இது குறித்து நிபுணர் விஜய் முகி, கூறும்போது, “செல்பேசி சேவை நிறுவனங்கள் உண்மையான ஐடிதானா என்று சோதிக்க ஆரம்பித்தால் அவர்கள் பெரிய அளவில் வாடிக்கையாளர்களை இழ்ந்து விடுவர், எப்படி சமூக வலைத்தளங்கள் தங்கள் பயனாளர்களைப் பார்க்கிறதோ அதேபோல்தான் செல்பேசி சேவை நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களைக் காண்கின்றனர். இந்த விவகாரத்தில் பேடிஎம் போன்ற இ-வாலட் நிறுவனங்களும் இதற்குப் பொறுப்பு. உங்கள் செல்பேசி எண்ணை வைத்து ஒரு பேடிஎம் கணக்குத் தொடங்கி விட முடியும்” என்றார்.
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் எலெக்ஷன் ஐடி கார்டு என்று கூகுளில் தேடிய போது, நூற்றுக்கணக்கான பக்கங்கள் வெகு சுலபமாக ஆவணங்களை டவுன்லோடு செய்யும் விதமாக வந்து நின்றதைப் பார்க்க முடிகிறது, இதோடு நிற்காமல் இது தொடர்பான வேறு தேடல் அறிவுறுத்தல்களையும் கூகுள் நமக்கு காட்டுகிறது. இதில் ‘பாஸ்போர்ட்’ ‘பான் கார்டு’, பான் கார்டு ஹெச்.டி. ஆகியவையும் அடங்கும் என்பது கவனிக்கத்தக்கது.
நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் ஓராண்டுக்குள் சிம்கார்டு பயனாளர்களின் அடையாளம் உண்மையானதுதானா என்பதை சரிபார்க்கும் மிகவும் கண்டிப்பான ஒரு சரிபார்ப்பு நடைமுறையை அரசு கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. போலி அடையாளங்களைப் பயன்படுத்தி வாங்கும் சிம் கார்டுகளை பெரும்பாலும் கிரிமினல்கள் பயன்படுத்துகின்றனர். இதோடு பயங்கரவாதிகள் சமூக விரோத சக்திகளும் இத்தகைய முறையில் பெறப்பட்ட சிம்கார்டுகளையே வைத்துள்ளனர் என்று இந்த சமூக ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.