பள்ளி கோடை விடுமுறை ஆரம்பம்: சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை – போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் எச்சரிக்கை
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டினால் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் நொளம்பூரில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற 11-ம் வகுப்பு மாணவர் நிகில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி உயிரிழந்தார்.
இதேபோல் சேத்துப்பட்டு செனாய் நகரைச் சேர்ந்த விஜய் என்ற 12-ம் வகுப்பு மாணவர் கடந்த 3-ம் தேதி இரவு மெரினா சென்று பைக்கில் வீடு திரும்பியபோது லாரி மோதிய விபத்தில் பலியானார்.
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் போக்குவரத்து விதிகளை மீறி பைக் ஓட்டிச் செல்வது பற்றி போக்குவரத்து போலீஸ் கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங், இணை ஆணையர் பவானீஸ்வரி ஆகியோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் பிடிக்க உத்தரவிட்டனர்.
அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் போக்குவரத்து போலீஸார் சென்னை முழுவதும் வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டனர். அப்போது, பைக் ஓட்டிச் சென்ற 215 சிறுவர்கள் சிக்கினர். அவர்களின் வாகனங்களை தற்காலிகமாக பறிமுதல் செய்த போக்குவரத்து போலீஸார் சிறுவர்களின் பெற்றோரை நேரில் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். பைக்கையும் ஒப்படைத்தனர்.
தற்போது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவடைந்துவிட்டன. மீதம் உள்ள பள்ளிகளிலும் விரைவில் கோடை விடுமுறை விடப்பட உள்ளது. இந்த விடுமுறையில் பெற்றோரின் மோட்டார் சைக்கிள்கள் அல்லது ஸ்கூட்டர்களை எடுத்து மாணவர்கள் ஓட்டிச் செல்ல வாய்ப்புள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங், இணை ஆணையர் பவானீஸ்வரி ஆகியோர் கூறியதாவது:
சென்னையில் சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணியாத பைக் ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாத கார் ஓட்டுநர் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர், வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள், அதி வேகமாக வாகனத்தை இயக்குபவர்கள், குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது, சிறுவர்கள் பைக் ஓட்டி செல்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 18 வயது நிரம்பாதவர்கள் பைக் ஓட்டிச் சென்றால் அவர்களின் பைக் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயது நிரம் பாத தங்கள் பிள்ளைகளை பெற்றோர் வாக னங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.