Breaking News
பா.ஜனதாவிற்கு எதிராக களமிறங்க மாயாவதி அழைப்பு; கூட்டணிக்கு அகிலேஷ் யாதவும் ஆதரவு

உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ் லக்னோ நகரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒன்றுசேர்ந்து கோரிக்கை

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடைபெறுவது தொடர்பாக சில எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினேன். அதே நேரம் இந்த வி‌ஷயத்தை பொறுத்தவரை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேருவது அவசியமாகும். அனைவரும், இனிவரும் தேர்தல்கள் அனைத்தும் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என ஒன்றாக கோரிக்கை விடுக்கவேண்டும்.

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்தால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்பதை கட்சிகள்தான் நிரூபித்து காட்டவேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் சவால் விடுகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் தேர்தல் கமி‌ஷனிடம்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இது எவ்வாறு சாத்தியமாகும்? வாக்குப்பதிவு எந்திரங்களின் சிப் மற்றும் மென்பொருளில் முறைகேடு செய்யமுடியாது என்பதை தேர்தல் கமி‌ஷன்தான் நிரூபிக்க வேண்டும்.

தயங்கமாட்டோம்

2019–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்ப்பதற்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயங்கமாட்டோம்.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மக்களை சாதி, மத அடிப்படையில் பிளவு படுத்தி வெற்றிகண்டுவிட்டது. தற்போது மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு, முன்பு சமாஜ்வாடி அரசு பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியைத்தான் பயன்படுத்தி வருகிறது.

நாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் மீதெல்லாம் விசாரணை நடத்தப்போகிறார்களாம். அதை தாராளமாக செய்யட்டும். ஏனென்றால் இதுபோன்ற திட்டங்களையெல்லாம் அவர்கள் தங்களது வாழ்நாளில் கண்டிருக்கவே மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மாயாவதியை தொடர்ந்து…

2019–ம் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேரவேண்டும் என்று நேற்று முன்தினம் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்த நிலையில், அதே கருத்தை அகிலேஷ் யாதவும் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றியை பெற்றது, அதேவெற்றியை இப்போதைய சட்டசபைத் தேர்தலிலும் நிலைநாட்டி உள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கைகோர்க்கும் நிலைக்கு வந்து உள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.