Breaking News
ஜீப்பில் இளைஞரை கட்டி வைத்த விவகாரம்: காஷ்மீர் ராணுவ பிரிவு மீது போலீஸ் வழக்கு

ராணுவ ஜீப்பில் இளைஞரைக் கட்டி வைத்து மனித கேடயம் போல் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக, காஷ்மீர் ராணுவப் பிரிவு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காஷ்மீர் தலைநகர் நகர் மக்களவை தொகுதிக்குக் கடந்த 9-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தேர்தலை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் கலவரத் தில் ஈடுபட்டனர். வாக்குச் சாவடி களைத் தீ வைத்து கொளுத்தினர். பல இடங்களில் வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன. பாதுகாப்புப் படையினர் மீது கும்பல் கல்வீச்சில் ஈடுபட்டன.

கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் பலியாயினர். இந்நிலையில், கல்வீச்சு நடந்த போது, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ராணுவ வீரர்கள் ஒரு இளைஞரைப் பிடித்து ஜீப்பில் கட்டி வைத்து, மனித கேடயமாகப் பயன்படுத்திய வீடியோ வெளியானது. அத்துடன் தாக்குதல் நடத்திய போது பொறுமை காத்த ராணுவ வீரர்களின் வீடியோவும், ஒரு இளைஞரின் நெற்றியில் வீரர் ஒருவர் துப்பாக்கி வைத்து சுடுவது போன்ற வீடியோவும் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்நிலையில், ஜீப்பில் இளைஞரைக் கட்டி வைத்தது தொடர்பாக காஷ்மீர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து டிஐஜி (மத்திய காஷ்மீர்) குலாம் ஹாசன் பட் நேற்று கூறும்போது, ‘‘இளைஞரை ஜீப்பில் கட்டி வைத்தது தொடர்பாக, பத்காம் மாவட்டம் பீர்வா போலீஸ் நிலையத்தில் 53-வது ஆர்ஆர் ராணுவப் பிரிவு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பிரிவின் மீது ரன்பீர் குற்றவியல் தண்டனை சட்டம் 342, 149, 506, 367 ஆகிய பிரிவுகளின் கீழ் ஏப்ரல் 13-ம் தேதி முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது’’ என்றார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால் அந்த மாநிலத்தில் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் (ஐபீசி) பொருந்தாது. காஷ்மீருக்கென ரன்பீர் குற்றவியல் தண்டனை சட்டம் அமலில் உள்ளது. அதன்படி ராணுவப் பிரிவு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.