4 மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள்: சுகேஷ் சந்திரசேகரின் அதிர வைக்கும் பின்னணி – விவரிக்கும் பெங்களூரு போலீஸ் அதிகாரிகள்
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் சார்பாக லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக கர்நாடக குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திராவின் உண்மையான பெயர் சுகேஷ் சந்திரசேகர் ரெட்டி (27). பெங்களூருவை சேர்ந்த இவர் சில இடங்களில் பாலாஜி என்ற பெயரிலும், ராக்கி என்ற பெயரிலும் தொழிலதிபராக வலம் வந்துள்ளார். ஆடம்பர பங்களா, வெளிநாட்டு கார், ஆடம்பர பொருட்கள், தங்க வைர நகைகள் என மிகவும் பணக்காரரைப் போல நடிப்பார்.
பெங்களூருவில் உள்ள ரெசிடென்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பியூசி முதலாம் ஆண்டு படிக்கும் போதே, பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார். பெங்களூரு மாநகர துணை காவல் ஆணையரின் மகன் எனக்கூறி, ரூ.10 லட்சத்தை ஏமாற்றி பறித்தார். இதே பாணியில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களின் உறவினர் எனக்கூறி, 50-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு ஹூலிமாவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் பேரன் என்றும், மத்திய அமைச்சராக இருந்த அழகிரியின் மகன் என்றும் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தார். இவரது மோசடி வலையில் சிக்கியவர்கள் அளித்த புகாரின் பேரில் சுகேஷ் சந்திரசேகரின் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகளை பெங்களூரு போலீஸார் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்குகள் கடந்த 2011-ம் ஆண்டு கர்நாடக குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து தனிப்படை அமைத்து சுகேஷ் சந்திரசேகர் குறித்து விசாரித்த போது ஒரே பாணியில் கர்நாடகா, ஆந்திரா, கோவா ஆகிய மாநிலங்களிலும் 100-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் திரைப்பட நடிகரிடம் அரசின் பழைய வாகனங்களை மலிவு விலையில் வாங்கி தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் ஏமாற்றியுள்ளார். இதேபோல பல தொழிலதிபர்களையும், குறிப்பாக பெண் தொழில் முனைவோரையும் இவர் ஏமாற்றியதாக சென்னையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நடிகையின் காதலன்
இதே தவிர பெங்களூரு சென்ட்ரல் வங்கி, சென்னை கனரா வங்கி, மும்பை நிதி நிறுவனம் ஆகியவற்றில் சுமார் 1 கோடி ரூபாய் வரை சுகேஷ் சந்திர சேகர் ஏமாற்றியுள்ளார். ‘மெட்ராஸ் கபே’ என்ற இந்தி படத்தில் நடித்த கேரளா நடிகை லீனா மரியபால் பெங்களூருவில் கல்லூரியில் படித்தபோது சுகேஷ் சந்திரசேகர் அவருடன் அறிமுகம் ஆகியுள்ளார். தான் ஒரு திரைப்பட இயக்குநர் எனக்கூறி, அவரை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். இதனால் மோசடி வழக்கு இவர் மீது மட்டுமல்லாமல் லீனா மரியபால் மீதும் பதிவு செய்யப்பட்டு, சென்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கோவா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக சுகேஷ் சந்திரசேகர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸாரின் கெடுபிடி அதிகரித்ததால் தனது வசிப்பிடத்தை டெல்லிக்கு மாற்றிக்கொண்டார். அங்கு தன்னை தொழிலதிபர் என்றும், அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர் என்று கூறியும் ஏராளமானோரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளதாக தெரிகிறது.
சுகேஷ் சந்திர சேகர் ஆடம்பர பங்களா, விலை உயர்ந்த கார்கள், விலை உயர்ந்த கை கடிகாரங்கள்,நகைகள், நடிகைகளுடன் பழக்கம், வெளிநாட்டு சுற்றுப்பயணம் என பகட்டாக வாழ்கிறார். இதற்காக நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாயை ஏமாற்றி பறித்துள்ளார். இப்போது டெல்லி போலீஸாரிடம் சிக்கியுள்ள அவரை பெங்களூரு அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். அப்போது மேலும் பல உண்மைகள் வெளிவரும்.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.