Breaking News
ஒரு வட்டத்துக்குள் விழ மாட்டேன் : ராஜமவுலி ஸ்பெஷல் பேட்டி

ஏப்ரல் 28ம் தேதி சினிமா ரசிகர்களுக்கு திருவிழா. பாகுபலி 2வை கொண்டாட இன்னும் 11 நாள்களே உள்ளன. படத்தின் இறுதிகட்ட பரபரப்பு பணிகளுக்கு இடையே சென்னை வந்திருந்த சூப்பர் டைரக்டர் ராஜமவுலி, தினகரனுக்கு அளித்த ஸ்பெஷல் பேட்டி:

* பாகுபலி முதல் பாகத்தை முடிச்சிட்டு ரிலீசுக்கு காத்திருந்த நேரம், இப்போ 2வது பாகத்துக்கு காத்திருக்கிற நேரம்… ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கா?

கண்டிப்பா இருக்கு. பாகுபலிங்கிற ஒரு கனவை நிஜமாக்கிட்டு, அதை மக்கள் பார்வைக்காக கொண்டு வரும்போது, அதை அவங்க எப்படி ஏத்துக்குவாங்க. ஃபேன்டஸி கலந்த சரித்திர படத்தை ரசிகர்கள் எந்த பார்வையோடு பார்ப்பாங்க, இந்த கதை எனக்கு என்ன ஃபீல் தந்துச்சோ, அதே ஃபீல் ஸ்கிரீன்ல கொண்டு வந்துட்டேன். மக்களுக்கும் அந்த ஃபீலை படம் கொடுக்குமான்னு ஏகப்பட்ட கேள்விகளோடு முதல் பாகம் ரிலீசப்போ காத்திருந்தேன். எங்க டீமோட உழைப்பு வீண் போகாதுங்கிற நம்பிக்கை இருந்துச்சு. அதுக்கு பலன் பல மடங்கு கிடைச்சதுன்னே சொல்லலாம். தமிழ், தெலுங்கு ஆடியன்சையும் தாண்டி நாடு முழுக்க ரசிகர்கள் படத்தை தூக்கி பிடிச்சிக்கிட்டாங்க. இது நான் எதிர்பார்க்காதது. இப்போ ரெண்டாவது பாகம் வெளிவரும்போது ஒரே எண்ணம்தான் இருக்கு. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யணும். முதல் பாகம் அளவுக்கு பதற்றம் இல்லை. ஆனா, முதல் பாகத்தைவிட இது மக்களுக்கு பிடிக்கணும்கிற வேண்டுதல் இருக்கு.

* முதல் பாகத்துலேருந்து இரண்டாவது பாகம் படம் எந்த விதத்துல வேறுபட்டு இருக்கும்?

முதல் பாகத்துல இதுதான் தீம்னு சொல்லியாச்சு. அதற்கான முடிச்சுகளும் இதுதான்னு காட்டியாச்சு. அதை அவிழ்க்கிறதுதான் 2வது பாகம். அதுதான் த்ரில்லிங்கா இருக்கும். முதல் பாகத்துல ஒவ்வொரு கேரக்டர்களை அறிமுகப்படுத்தி, அந்த கேரக்டர்கள் என்ன பண்ணுதுங்கிறதை மட்டும்தான் காட்டினோம். இதுல ஒவ்வொரு கேரக்டருக்கும் இன்னொரு கேரக்டரோடு இருக்கிற தொடர்பு, அந்த கேரக்டர்களுக்கான கிளைக் கதைகள் எப்படி ஓரிடத்துல வந்து சேருதுங்கிறது திரைக்கதையில சொல்லியிருக்கேன். முதல் பாகம் படம் முடியும்போது, அதுக்குள்ள படம் முடிஞ்சிருச்சாங்கிற ஏக்கம் ரசிகர்களுக்கு இருந்துச்சு. அதையெல்லாம் போக்குற மாதிரி ரெண்டாவது பாகம் இருக்கும். சிம்பிளா சொல்லணும்னா, கதையே இப்போதான் பாஸ் ஆரம்பிக்கப்போகுது.

* பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்னாருங்கிற கேள்வியும் படத்தோட எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருக்கு. யாருக்காவது இந்த ரகசியத்தை நீங்க சொல்லி இருக்கீங்களா?

(சிரிக்கிறார்) கண்டிப்பா கிடையாதுங்க. சிலர்கிட்ட சொன்னதாக சொல்வதும் உண்மை கிடையாது. சோஷியல் மீடியால ரசிகர்கள் இந்த கேள்வியை பெரிசாக்கிவிட்டாங்க. இது டாக் ஆஃப் த நேஷனா மாறும்னு நினைச்சு பார்க்கல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ மீடியா, ரசிகர்கள், நண்பர்களுன்னு யாரை பார்த்தாலும் அந்த கேள்வியை மட்டும் விட்டுட்டு வேற கேளுங்கன்னு தான் முதல்ல சொல்றேன் (மீண்டும் சிரிக்கிறார்).

* இந்த படத்தை எடுக்க உங்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்த விஷயம் எது?

அப்பா விஜயேந்திர பிரசாத் சொன்ன கதைதான். பாகுபலி கதையை எழுதிட்டு வந்து அப்பா சொன்னப்போ, சூப்பர் மேன் போல அபூர்வ சக்தி கொண்ட பாகுபலி, கண்ணாலேயே மிரட்டி ஆண்களுக்கு சிம்மசொப்பனமா விளங்குற சிவகாமி, ஒரு பக்கம் கணவனோட காதலையும் இன்னொரு பக்கம் மகனோட அன்பையும் மனசுல சுமந்துக்கிட்டு கண்கள்ல பழி வாங்குற வெறியோடு இருக்கிற தேவசேனா, தனக்குள்ள இருக்கிற பெண்மையை மறந்துட்டு தன்னோட இனத்துக்காக போராடுற வீராங்கனை அவந்திகா, அதிகாரம் ஆணவம் கொடூரத்தோட மொத்த உருவமான
பல்லாலத்தேவன்னு ஒவ்வொரு கேரக்டரை உள்வாங்கியபோதும் தண்ணீர்ல மூழ்கிற நேரத்துலேயும் குழந்தையை ஒரு கையால தாங்குற அந்த காட்சி, அம்மாவுக்காக மெகா சிவலிங்க சிலையை தூக்கி வர்ற அந்த தோரணைன்னு கதை கேட்கும்போதும் சிலிர்த்துப்போனேன். இந்த உணர்வை ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும் கொண்டு வரணும்னு அப்போவே முடிவு பண்ணிட்டேன். விஷுவலா அதை கொண்டு வர்றதுதான் எனக்கு முன்னாடி இருந்த பெரிய சவால். ஒட்டுமொத்த கதையில ஒரு ஃபயர் இருந்துச்சு. அதை ஸ்கிரின்ல 100 சதவீதம் கொண்டு வரணும்னு தீர்மானிச்சேன். அதுக்கு முழு பக்க பலமா இருந்தது என்னோட டீம். அவங்களுக்கு தலைவணங்குறேன்.

* மகதீரா, நான் ஈ, இப்போ பாகுபலின்னு எல்லா படத்துலேயும் மாஸ் அண்ட் கிளாஸ் ரெண்டுவித ஆடியன்சையும் ஈர்க்குறீங்க. இதுக்கான உங்க டெக்னிக் என்ன?

ரொம்ப சிம்பிள். என்னோட டார்க்கெட் எல்லாமே மாஸ் ஆடியன்ஸ்தான். அது என்னோட முதல் படத்துலேருந்தே பார்க்கலாம். மாஸுக்கான ஒரு விஷயத்தை நம்புற விதத்துல லாஜிக்கா சொன்னா அதை கிளாஸ் ஆடியன்சும் ஏத்துக்குவாங்க. உதாரணத்துக்கு பாகுபலில வர்ற போர்க்காட்சிகள். மெகா போர்வையை போட்டு ஒரு கூட்டத்தையே அதுக்குள்ள சிக்க வைப்பார் பிரபாஸ். இது பக்கா மாஸ் காட்சி. ஆனா லாஜிக்கோடும் மூளைக்கு வேலை கொடுக்கிற மாதிரியும் இருந்ததால கிளாஸ் ஆடியன்ஸையும் ஈர்த்துச்சு. இதுவே ஒரு ஆக்‌ஷன் காட்சியில வெறித்தனமா ஹீரோ வில்லனை அடிக்கும்போது, பறந்து பறந்து அடிச்சா அது மாஸ் ரசிகர்களுக்கு பிடிக்கலாம். கிளாஸ் ஆடியன்சுக்கு பிடிக்காமல் போகும். பக்கா மாஸ் விஷயத்தையும் நம்புற மாதிரி சொன்னாலே அது எல்லா வகை ரசிகர்களையும் சென்றடையும்னு நம்புறேன்.

* ஆமிர்கானின் பிகே வசூல் சாதனையை முறியடிக்கிறதுதான் பாகுபலி 2வோட இலக்குன்னு நியூஸ் வருது?

பாகுபலி படம் இந்த அளவுக்கு வசூல் பண்ணும்னு நான் யோசிக்கல. ஆனா இப்போ பாகுபலி 2 அதை விட அதிகமா வசூலிக்கணும்கிறதுதான் விருப்பம். அதுக்காக எங்க படத்தோட வசூல் இலக்கு இதுதான்னு நிர்ணயிச்சு ஒர்க் பண்ண முடியாது. முதல் பாகத்தை விட இதை இன்னும் ரசிகர்கள் விரும்புவாங்கன்னு நம்புறேன்.

* ஒரு படத்துக்கு ஒரு கதாசிரியருங்கிற சூழல்லதான் நம்ம சினிமா இன்னமும் இயங்கிட்டு இருக்கு. ஹாலிவுட் மாதிரி ஒரு டீமா ஸ்கிரிப்ட் பண்ற நிலை வராதா?

அங்கே ஸ்கிரிப்ட் மட்டும் கிடையாது, எல்லாத்துக்குமே டீம் இருக்கு. ஆர்ட் டைரக்‌ஷன்லேருந்து காஸ்டியூம், மேக்அப்னு ஒவ்வொரு டிபார்ட்மென்ட்லேயும் நாலஞ்சு பேர் ஒர்க் பண்றாங்க. இங்கே ஆர்ட்ல, காஸ்டியூம்ல ஒருத்தரே சிறப்பா பண்றதால நாம அது பற்றி கேள்வி கேட்கிறது கிடையாது. ஆனா, ஸ்கிரிப்ட்ல படங்கள் சொதப்பும்போது ஒரு டீம் இதுல ஒர்க் பண்ணினா நல்லா இருக்கும்னு நினைக்குறோம். அது சரியானதுதான். ஒரு சப்ஜெக்ட்ல நாலு பேரு ஒர்க் பண்ணும்போது, நாலு பேருக்கு அந்த சப்ஜெக்ட்ல நாலு விதமான புரிதல், ஐடியாக்கள் இருக்கும். அது எல்லாமே அந்த ஸ்கிரிப்ட்டை மெருகேத்த கிடைக்கிற போனஸ்தான். அந்த போனஸ்தான் ஒரு நல்ல படத்தை சிறப்பான படமா மாத்தும். டெக்னாலஜி லெவல்ல நாம ஹாலிவுட்டை நெருங்கிட்டு வர்றோம். கண்டிப்பா ஸ்கிரிப்ட் விஷயத்துலேயும் மாற்றம் நடக்கும்.

* இனிமே கிராபிக்ஸ் இல்லாத படங்கள்ல ஒர்க் பண்ண விரும்புறேன்னு சமீபத்துல சொல்லி இருந்தீங்க. ஏன் அப்படி?

பாகுபலி ரெண்டு பாகத்துக்கும் சேர்த்து கிராபிக்ஸுக்காக மட்டுமே ஒரு வருஷம் செலவிட்டு இருக்கோம். ஃபேன்டஸி படத்துல கிராபிக்ஸ் தவிர்க்க முடியாது. ஆனா, முடிஞ்சவரைக்கும் செயற்கைலேருந்து விலகி இருக்கணும்னு நினைக்கிறேன்.

* பாகுபலி பண்ணினதால இனிமே இதைவிட பெரிய படம்தான் தரணும்னு பிரஷர் ஏற்பட்டிருக்கா?

அப்படி எதுவும் இல்லை. என்னைப் பொருத்தவரை, அது எல்லாம் நாம தீர்மானிக்கிறதுதான். பிலிம் மேக்கர் ஒரு வட்டத்துக்குள்ள விழுந்துடக்கூடாது. எல்லாவிதமான படமும் பண்ண விரும்புறேன். மகதீரா மாதிரி பெரிய பட்ஜெட் படம் பண்ணிட்டுதான் நான் ஈ மாதிரி சின்ன பட்ஜெட் படமும் பண்ணினேன். பாகுபலிக்கு பிறகு என்னங்கிறது முடிவு பண்ணல. அது நான் ஈ மாதிரி சின்ன பட்ஜெட் படமா கூட இருக்கலாம். ஆனா, கண்டிப்பா கிராபிக்ஸ் இல்லாத படமா இருக்கும்.

* தமிழ் நல்லா பேசுறீங்க. எப்போ கத்துக்கிட்டீங்க?

பாகுபலியை தமிழ்லேயும் பண்ணனும்னு முடிவு பண்ணினப்போ தமிழ் டீச்சரை வச்சி கத்துக்கிட்டேன். படத்துல கும்பல்ல ஒரு துணை நடிகர் பேசுற சின்ன வசனமா இருந்தாலும் அதுக்கான அர்த்தம் எனக்கு புரியணும்கிறதுல உறுதியா இருந்தேன். அதுக்காக ஒவ்வொரு வரிக்கும் இதுக்கு என்ன அர்த்தம்னு மத்தவங்ககிட்ட கேட்க விரும்பல. நானே தமிழ் படிக்கவும் பேசவும் கத்துக்கிட்டு ஷூட்டிங்கிற்கு போனேன். பிரபாஸும் அப்படித்தான். அவருக்கு தமிழ் வரும். இருந்தாலும் அவரோட தமிழ் வசன உச்சரிப்பு சரியா இருக்கணும்னு ஷூட்டிங்கிற்கு முன்னாடி கிளாஸ் எடுத்தோம். சின்ன பையன் மாதிரி வந்து உட்கார்ந்துட்டு தமிழ் வசனங்களை மனப்பாடம் பண்ணிட்டு இருப்பார். படம் பெர்ஃபெக்டா வரணும்கிறதுக்குதான் எல்லாமே.

* ரஜினியை இயக்கப்போறதா இடையில பேச்சு எழுந்துச்சு?

எல்லாமே பேச்சுவார்த்தையில இருக்கு. எதுவும் முடிவாகல. மகாபாரதம் பண்ணனும்கிற விருப்பமும் இருக்கு. ஆனா, அடுத்த படம் என்னாங்கிறது இந்த நாள் வரை எனக்கே தெரியாது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.