Breaking News
கால்பந்தில் இந்தியா தோல்வி

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் போர்ச்சுக்கலின் லிஸ்பன் நகரில் நேற்று நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் விட்டோரியா டி செட்பால் கிளப் அணியுடன் இந்திய அணி மோதியது. இதில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

தொடக்க நிமிடங்களில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் இதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை. 16-வது நிமிடத்தில் விட்டோரியா அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணி வீரர் அடித்த பந்த பந்து கோல்கம்பத்தை விட்டு விலகி சென்றது.

38-வது நிமிடத்தில் விட்டோரியா அணி முதல் கோலை அடித்தது. பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் புருனோ வெஞ்சுரா கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் விட்டோரியா அணி 1-0 என முன்னிலை பெற்றது. 47-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு உருவானது.

அனிகெட் ஜாதவ் இலக்கை நோக்கி உதைத்த பந்து கோல்கம்பத்தின் மேலே சென்று ஏமாற்றம் அளித்தது. அடுத்த நிமிடத்தில் மீண்டும் அவர் அடித்த பந்து கோல்கம்பத்தை விட்டு விலகிச் சென்றது. ஒருவழியாக 67-வது நிமிடத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது.

பெனால்டி வாய்ப்பை அனிகெட் ஜாதவ் கோலாக மாற்ற ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது. இதன் பின்னர் இந்திய வீரர்கள் முன்னிலை பெற கடுமையாக போராடினர். ஆனால் மேற்கொண்டு கோல்கள் அடிக்க முடியாமல் போனது. ஆட்டம் முடிவடைய 5 நிமிடங்கள் இருந்த நிலையில் விட்டோரியா அணி 2-வது கோலை அடித்தது. இதுவே அந்த அணியின் வெற்றி கோலாகவும் அமைந்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.