‘வடசென்னை’ அப்டேட்: அமலா பால் விலகல்; ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம்
‘வடசென்னை’ படத்திலிருந்து அமலா பால் விலகிக் கொள்ளவே, அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘வடசென்னை’. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறது.
இப்படத்துக்கு முதலில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சமந்தா, தேதிகள் பிரச்சினை காரணமாக விலகவே அமலா பால் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். தற்போது அவரும் தேதிகள் பிரச்சினைக் காரணமாக விலகியுள்ளார்.
‘திருட்டு பயலே 2’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதால், அப்படத்தின் தேதிகள் ‘வடசென்னை’ படத்தின் தேதிகளோடு ஒத்துவருவதால் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்.
சில நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால் இப்பிரச்சினை எழுந்துள்ளது. முன்பாக, விஜய் சேதுபதியும் தேதிகள் பிரச்சினை காரணமாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.