இன்று கடும் வெயில் கொளுத்தும் வெளியே நடமாடுவதை தவிர்க்கும்படி வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள்
தமிழக உள்மாவட்டங்களில் இன்று 111 டிகிரி வரை வெயில் கொளுத்தும் எனவும், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கவேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனல்காற்று
தமிழகத்தில் கோடைகாலம் முன்கூட்டியே தொடங்கிவிட்ட நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக வேலூர், சேலம், திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, கரூர், கடலூர் மற்றும் சென்னை மீனம்பாக்கம், திருப்பத்தூர், பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசியது. அதன் தாக்கத்தால் வெப்பநிலையும் 100 டிகிரியை தாண்டி காணப்பட்டது. இரவு நேரங்களில் கூட வெப்பம் குறையாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். தொடர்ந்து இந்த பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தாலும் அனல்காற்று வீசுவதும் தொடர்கிறது.
வரும் 4-ந் தேதி அக்னிநட்சத்திரம் என்கிற கத்திரிவெயில் தொடங்கவிருக்கும் நிலையில் மீண்டும் வெப்பக்காற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:-
வெப்பம் அதிகரிக்கும்
தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 38 செல்சியஸ் குறைந்த பட்சம் 29 செல்சியஸ் வெப்பம் பதிவாகும். சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை.
உள்மாவட்டங்களான வேலூர், தர்மபுரி, நாமக்கல், மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் 41 முதல் 44 செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். இயல்பைவிட 2 முதல் 3 செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக பதிவாகும். அடுத்த 24 மணி நேரத்தில் (அதாவது இன்று) அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெப்பம் பதிவாகலாம். எனவே பகல்நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கலாம். அதே நேரம் சேலம், தர்மபுரி, நாமக்கல், வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானி தலா 5 செ.மீ., ஏற்காடு 4 செ.மீ., குமாரபாளையம், பெண்ணுகொண்டாபுரம் மற்றும் ஈரோடு தலா 3 செ.மீ., பெருந்துறை, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை தலா 2 செ.மீ., கரூர், சத்தியமங்கலம், மணப்பாறை, சோழவந்தான், பர்கூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.