Breaking News
இல்லாத பேரவைக்கு விண்ணப்பம் விற்பனை… ரூ. 20 கோடி மோசடி புகார்… ஜெ.தீபாவிடம் போலீஸ் விசாரணை

பண மோசடி செய்ததாக புகாரின்பேரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிடம் மாம்பலம் போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கிய அவரது பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணியாற்றிய செலவு ஆகியவை மூலம் ரூ. 20 கோடி மோசடி செய்ததாக அவர் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் நெசப்பாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் புகார் அளித்தனர்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருக்கையில், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபாவின் தலைமையை ஏற்று செயல்பட்டு வந்தேன். இந்நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளின் போது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார்.
அதற்கு அவரது நண்பர் ராஜாவை பொதுச் செயலாளராகவும், சரண்யாவை தலைவராகவும், தீபா பொருளாளராகவும் செயல்படுவதாக அறிவித்தனர். பல்வேறு முறைகேடுகள் செய்த ராஜாவை பொதுச் செயலாளராக்கியதற்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து தீபாவின் முற்றுகையிட்டு போராடினோம். இதைத் தொடர்ந்து கட்சியின் பொதுதச் செயலாளராகவும், பொருளாளராகவும் தீபாவே செயல்படுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், மார்ச் 27-ம் தேதி சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் எம்ஜிஆர் அம்மா- தீபா பேரவை என்ற சங்கத்தின் பதிவை நிராகரித்து ரத்து செய்துள்ளார். அதை தீபா எங்களிடம் முற்றிலும் மறைத்தார். பேரவையே இல்லாத நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, எங்களை பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வைத்து விட்டார்.
இதனிடையே பேரவையின் உறுப்பினர் சேர்க்கைக்கு படிவம் அச்சடித்து கொடுத்து, பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவரிடம், 5,000 படிவங்களை வாங்கி, ரூ.50 ஆயிரத்தை இழந்துவிட்டேன்.
பதிவு நிராகரிக்கப்பட்ட பேரவைக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்தும் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த, ராஜா, சரண்யா மற்றும் தீபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டுக்கு தற்போது சென்ற போலீஸார் பண மோசடி குறித்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் தீபா கூறிகையில், என் பேரவைக்கும், என் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க சசிகலாவின் பினாமி அரசு பொய்யான புகார் கொடுத்துள்ளனர் என்றார் அவர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.