காவிரியில் நீர்வரத்து முற்றிலும் சரிந்தது வெறிச்சோடியது ஒகேனக்கல்
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அடியோடு சரிந்ததால், விடுமுறை தினமான நேற்று, சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு, வார விடுமுறை தினங்களில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். காவிரியில் தண்ணீர் வரத்து முற்றிலும் சரிந்த நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த அருவிகள் வெறும் பாறைக்காடாக தென்படுகின்றன. கடும் வறட்சியான காலங்களிலும் சொற்ப அளவுக்காவது தண்ணீர் வந்து கொண்டிருந்த மெயினருவி, தண்ணீர் வந்த சுவடே இல்லாத அளவுக்கு வறண்டு கிடக்கிறது.
பாறை இடுக்குகளில் குட்டை போல தேங்கி கிடக்கும் தண்ணீரும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்து விட்டது. இதன் காரணமாக, விடுமுறை தினங்களில், சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் அலைமோதும் ஒகேனக்கல், நேற்று ஆளரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்கள் வராததால், பரிசல் ஓட்டிகள், மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.