கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் 44-வது பிறந்தநாள் இன்று
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 44-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
மாஸ்டர் பேட்ஸ்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின், மும்பையில் நடுத்தரக் குடும்பத்தில் கடந்த 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதியன்று பிறந்தார். கிரிக்கெட் விளையாட்டில் தீரா ஆர்வம் கொண்ட சச்சின், கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரிடம் பயிற்சி பெற்றார். பள்ளிகளுக்கு இடையேயான போட்டி ஒன்றில் இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்தது இன்றளவும் பெருமையாக பேசப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் முதன்முதலாக 15-வது வயதில் விளையாடி 100 ரன்கள் எடுத்த சச்சின், பாகிஸ்தானுக்கு எதிராக தனது 16-வது வயதில் களம் இறங்கி டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது முதல், கிரிக்கெட் வரலாற்றில் ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்ததுடன், சரித்தர சாதனையும் படைத்து எவராலும் அசைக்க முடியாத கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்தார் சச்சின் டெண்டுல்கர்.
டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்கள், சர்வதேசப் போட்டிகளில் 100 சதம் என ஏராளமான சாதனைகளைப் படைத்தவர். பந்து வீச்சிலும் வல்லவர். கடந்த 2010-ஆம் ஆண்டில் குவாலியரில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 200 ரன்களைக் குவித்து உலக கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார்.
மாநிலங்களவை நியமன உறுப்பினராக கடந்த 2012-ஆம் ஆண்டில் தேர்ந்தேடுக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், பாரத ரத்னா, பத்மவிபூஷண், பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, இந்திய விமானப் படையின் கவுரவ கேப்டன் என ஏராளமான விருதுகளுக்கும், கவுரவங்களுக்கும் சொந்தக்காரர். இப்படி பல்வேறு சாதனைகளை படைத்த, சச்சினின் வாழ்க்கை பயணத்தை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதமாக ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ எனும் திரைப்படம் எடுக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. இந்தப் படம் வருகிற மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பெற்றுவிட்ட, கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.