பத்தாயிரம் ரன்களைக் கடந்து யூனிஸ்கான் புதிய சாதனை!
இன்னும் 23 ரன்கள் எடுக்க வேண்டும். அதைச் செய்தால், 10,000 ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அடைய முடியும். இதை மனதில் வைத்துக்கொண்டு களமிறங்கினார், யூனிஸ்கான். வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார், பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் யூனிஸ்கான். இவர், இந்தத் தொடரோடு ஓய்வுபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 22 ரன்களில் இருந்தபோது, ராஸ்டன் சேஸ் பந்தில் அழகான ஸ்வீப் ஷாட் ஆடி பவுண்டரி எடுத்தார். அந்த பவுண்டரியோடு 10,000 ரன்களைக் கடந்த பெருமையும் கிடைத்தது. இன்று, அவர் சந்தித்த 84-வது பந்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இது, அவருக்கு 208-வது டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும். 10,000 ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையைப் பெற்றதும் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் யூனிஸ்கான்.
இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார சங்ககாரா, காலிஸ், டிராவிட், லாரா, ஜெயவர்த்தனே, ஆலன் பார்டர், சுனில் கவாஸ்கர், அலிஸ்டர் குக், சந்திரபால், ஸ்டீவ் வாக் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்துள்ளனர்.