ஆப்கன் ராணுவ தளம் மீது தாக்குதல் எதிரொலி ராணுவ அமைச்சர் தளபதி ராஜினாமா
ஆப்கனில் ராணுவ முகாம் மீதான தலிபான்கள் நடத்திய தாக்குதலை தடுக்க தவறியதற்கு பொறுப்பேற்று ராணுவ அமைச்சர் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியான மசார் இ ஷரீப் பகுதியில் ராணுவ முகாம் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீரர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வீரர்கள் போன்று உடை அணிந்து வாகனத்தில் வந்த தலிபான்கள் மசூதிக்குள் இருந்த வீரர்கள் மற்றும் உணவக விடுதியில் இருந்த வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இயந்திர துப்பாக்கிகளால் தலிபான் சுட்டத்தில் சுமார் 50 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பலர் உயிரிழந்தனர். இதன் மூலம் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம், ஆப்கன் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்கள் தாக்குதலை தடுக்க தவறியதற்காக அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதற்கு பொறுப்பேற்று ராணுவ அமைச்சர் அப்துல்லா ஹிபாபி மற்றும் ராணுவ தலைமை தளபதி குவாடம் ஷா ஷாஹீம் ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா கடிதத்தை அதிபர் அஷ்ரப் கனி ஏற்றுக்கொண்டார்.