கேரளாவில் பணி இடமாற்றம் செய்யப்பட்ட சென்குமாருக்கு மீண்டும் சட்டம் ஒழுங்கு டிஜிபி பணி
கேரளாவில் பணி இடமாற்றம் செய்யப்பட்ட சட்டம் – ஒழுங்கு டிஜிபி சென்குமாரை மீண்டும் அதே பணியில் அமர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சென்குமார் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு இடதுமுன்னணி ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே சென்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘கொல்லம் அருகே பூற்றிங்கல் கோயில் வெடிவிபத்து மற்றும் எர்ணாகுளம் இளம்பெண் ஜிஷா ெகாடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்குகளில் சென்குமார் முறையாக விசாரணை நடத்தவில்லை. இதனால் சென்குமார் மாற்றப்பட்டார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘டிஜிபியாக நியமிக்கப்படுபவர் 2 ஆண்டுகளுக்குள் இடமாற்றம் செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. அதை மீறி அரசு இடமாற்றம் செய்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து விலகிய சந்திரசேகரன் வெட்டி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு பழிவாங்கும் நோக்கில் என்னை இடமாற்றம் செய்துள்ளனர்’ என தெரிவித்திருந்தார்.உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. தொடர்ந்து சென்குமார் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மதன் பி.லோகூர், தீபக்குப்தா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் ேநற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அரசின் உத்தரவை ரத்து செய்து, சென்குமாரை மீண்டும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்க ேகரள அரசுக்கு உத்தரவிட்டது. தீர்ப்பு குறித்து சென்குமார் கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா மாநில போலீசுக்கும் இது நல்ல பலனை கொடுக்கும். உண்மையாக பணியாற்றும் போலீசாருக்கு இந்த தீர்ப்பு சிறந்த உதாரணமாக விளங்கும்’’ என்றார்.