Breaking News
வைகையில் தெர்மாகோல் விவகாரம் முற்றுகிறது அமைச்சர் அழுத்தம் தந்தாலும் அதிகாரிகள் தடுக்காதது ஏன்? : கிடுக்கிப்பிடி விசாரணை

வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ, கடந்த 21ம் தேதி தெர்மாகோல் மிதக்க விட்ட திட்டம் பெரும் தோல்வியில் முடிந்தது. கடும் விமர்சனங்களையும் சந்தித்தது. அமைச்சருடன் மதுரை கலெக்டர் வீரராகவராவ், தேனி கலெக்டர் வெங்கடாச்சலம், மதுரை மாநகராட்சி கமிஷனர் சந்தீப் நந்தூரி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் என அதிகாரிகள் பட்டாளமே மதுரை, தேனியில் இருந்து படையெடுத்து பங்கேற்றது. அதிகாரிகள் அனைவருமே அமைச்சரின் அழுத்தம் காரணமாகத்தான், தெர்மாகோல் போடப்பட்டது என்கின்றனர். இந்த விவகாரத்தை தமிழக அரசு மூடி மறைக்க திட்டமிட்டது. ஆனால் டெல்லியில் இருந்து மத்திய அரசு சுற்றுச்சூழல் அதிகாரிகள் கேள்வி எழுப்பி உள்ளதால் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது. ‘‘சுற்றுச்சூழல்துறையின் அங்கீகாரம் அளிக்கப்படாத நிலையில், ஆய்வு நிலையிலுள்ள ஒரு முறையை அமலாக்க அமைச்சர் அழுத்தம் கொடுத்தாலும், அதிகாரிகள், பொறியாளர்கள் விளக்கி தடுக்காதது ஏன்?” என்று விளக்கம் கேட்டு கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கி உள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அதிகாரிகள் கேள்வி எழுப்பியதும், தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் துறை செயலாளர்கள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

வைகை அணை நீர்மட்டம் தற்போது 22.28 அடியாக சரிந்துள்ளது. இதில் 21 அடிக்கு கீழ் வண்டல் மண் நிறைந்துள்ளது. நீர்மட்டம் கடுமையாக குறைந்து அணையே வற்றும் நிலையில் உள்ளது. இச்சூழலில் “அமைச்சரின் தெர்மாகோல் நிரப்பும் திட்டம் தோல்வியில் முடிந்தது, ஒரு வகையில் நன்மையே” என்று சுற்றுச்சூழல் ஆர்வர்கள் கருதுகின்றனர். அவர்கள் கூறும்போது, “அணையில் தெர்மாகோல் நிரப்பி இருந்தால், சில நாட்களில் தண்ணீர் காலியானதும் விபரீதம் ஏற்பட்டு இருக்கும். மிதக்க விடப்பட்ட தெர்மாகோல் சகதியில் படிந்து, அதை மீன்கள் சாப்பிட்டு செத்து மிதந்து இருக்கும். அந்த மீன்களை சாப்பிடுவோருக்கும் உடலில் கோளாறு ஏற்பட்டு விபரீதம் ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. எனவே அணையில் ஆபத்து நேராமல் தப்பி உள்ளது” என்றனர்.

‘எந்த நாட்டிலும் இப்படி பார்த்ததில்லை’ மகசேசே விருது பெற்றவர் குற்றச்சாட்டு

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ராஜேந்திரசிங். ‘நீரியல் நாயகர்’ எனப்படும் இவர், 35 ஆண்டுகளாக தண்ணீர் சேமிப்புக்காக பாடுபட்டு வருகிறார். இதற்காக இவருக்கு மகசேசே விருது கிடைத்துள்ளது. மதுரைக்கு நேற்று வந்த ராஜேந்திரசிங் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 70 சதவீத ஆறுகள் உயிர்ப்புடன் இல்லை. தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகள், ஆறுகளை பாழ்படுத்தி விட்டன. மக்கள் நினைத்தால் ஆறுகளை உயிர்ப்பிக்க முடியும் என்றார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், அமைச்சர் செல்லூர் ராஜூ நீர் ஆவியாவதை தடுக்க, வைகை அணையில் தெர்மாகோல் போட்டது குறித்து கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘‘இது நாடகம். இதுபோன்ற செயலை நான் எங்குமே பார்த்ததில்லை. இது சுற்றுச்சூழலை மாசுபடுத்தி விடும்,” என்றார்.

அமைச்சர் மவுனம்

‘தெர்மாகோல் விவகாரத்தில் மேலும் எதுவும் கருத்து கூற வேண்டாம்’ என அமைச்சர் செல்லூர் ராஜூக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்போது எதுவும் பேசாமல் மவுனமாகி விட்டார். இந்த விவகாரம் அரங்கேறியது எப்படி? என்று விசாரணை தீவிரமாகி இருப்பதால், அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.