பசுக்களுக்கும் வருகிறது ஆதார் அடையாள எண்
பசு கடத்தலை தடுக்க, குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை போன்று பசுக்களுக்கும் தனித்துவமான அடையாள சான்று வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்திய – வங்கதேச எல்லைப் பகுதியில் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அகில் பாரத் கிருஷி கோ சேவா சங்கம் என்ற அமைப்பு மனு தாக்கல் செய்து இருந்தது. பசு கடத்தலை தடுப்பது தொடர்பாக நிபுணர்கள் குழு அமைத்து பரிந்துரை அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் தலைமையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.
தற்போது இந்த குழு, பசு கடத்தலை தடுப்பது தொடர்பாக தனது பரிந்துரை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதுபோல், பசுக்களுக்கு 12 இலக்க எண் கொண்ட தனித்துவமான அடையாள சான்று வழங்கலாம். அதில், பசுவின் நிறம், வயது, தழும்புகள், உயரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இருக்க வேண்டும்.
கால்நடைகள் கடத்தலை தடுக்க மாநில அரசுகளின் பல்வேறு துறைகளும் பொறுப்பேற்க வேண்டும். மேலும், ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை விதிமுறைகளை சுங்க வரி அதிகாரிகள், போக்குவரத்து துறை, போலீஸ் மற்றும் எல்லை பாதுகாப்பு வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு பரிந்துரைகளை குழு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம், நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து இன்று அது தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கும் என்று தெரிகிறது.