பயிர்கள் கருகியதால் 2 விவசாயிகள் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த முதலிபட்டியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (56). இவரது மனைவி ராமுத்தாய் (40). தம்பதிக்கு விக்னேஷ் (17), முத்து முனியசாமி (14) என இரு மகன்கள் உள்ளனர். தர்மலிங்கம் மனைவி நகைகளை அடகு வைத்தும், தெரிந்தவர்களிடம் கடன் பெற்றும் தனது நிலத்தில் உளுந்து உள்ளிட்ட மானாவாரி பயிர்களை சாகுபடி செய்திருந்தார். இதற்காக ₹1 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது. வறட்சியால் பயிர்கள் கருகி விட்டன. இதனால் மனம் உடைந்த அவர், நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாபநாசத்தில்: பாபநாசம் அடுத்த அம்மாப் பேட்டை ஒன்றியம் திருக்கருக்காவூர் ஆதி திராவிடர் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (48). விவசாயி. விவசாயத்துக்கு வாங்கிய கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ராமச்சந்திரன் கடந்த 19ம் தேதி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த 21ம்தேதி இறந்தார். இது குறித்து பாபநாசம் போலீசார் விசாரிக்கின்றனர்.