விவசாய வருமானம் மீது வரி விதிக்கப்படாது : அருண் ஜெட்லி
விவசாயத் துறை வருமானம் மீது, வரி விதிக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை,” என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
ஆலோசனை:
‘திட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் அமைப்பான, ‘நிடி ஆயோக்’ உறுப்பினர், பிபேக் தேப்ராய், விவசாயத்துறை வருமானத்தின் மீது வரி விதிக்கப்பட வேண்டும்’ என, சமீபத்தில் ஆலோசனை கூறியிருந்தார்.
அதிகாரம் இல்லை:
இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயத்துறை வருமானம் மீது, வரி விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்ட அதிகார வரம்பின்படி, விவசாய வருமானம் மீது வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் தாக்கம்:
விவசாய வருமானம் மீது வரி விதிப்பது, அரசியல் ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. இதனால், மத்தியில் ஆட்சி அமைக்கும் அரசுகள் அனைத்தும், விவசாய வருமானம் மீது வரி விதிப்பதை தவிர்த்து வருகின்றன.
கடந்த மார்ச், 22ல், பார்லிமென்டில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில், ‘விவசாய வருமானம் மீது வரி விதிக்கப்படுவதில்லை; வருங்காலத்திலும், வரி விதிக்கப்படாது’ எனக் கூறியிருந்தார்.